உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இறைவனின் அனைத்து கவசங்களையும் நாம் படிக்க வேண்டும்: விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள் பேச்சு

இறைவனின் அனைத்து கவசங்களையும் நாம் படிக்க வேண்டும்: விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள் பேச்சு

திருவண்ணாமலை: ‘‘இறைவனுடைய அருள் நமக்கு கவசமாக இருந்து காப்பாற்ற, கந்த சஷ்டி கவசம் முதற்கொண்டு அனைத்து கவசங்களையும் படித்து, நாம் பயன்பெற வேண்டும்,’’ என, காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள் பேசினார்.


திருவண்ணாமலையில், வேத ஆகம தேவார ஆன்மிக கலாசார, இரு நாள் மாநாடு நேற்று தொடங்கியது. நேற்று காலை, 1,008 சிவாச்சாரியார்கள் கூடி, உலக நன்மைக்காக சிவ பூஜை நடந்தது. இதை, காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள் தொடங்கி வைத்து பேசியதாவது:


தமிழக வரலாற்றிலே திருவண்ணாமலையில், மஹா அருணாச்சலம் என்ற இவ்வூரிலே, மிகச் சிறப்பாக இம்மாநாடு நடக்கிறது. வெள்ளிக்கிழமை சண்டி ஹோமம், பூர்ணாஹூதி என, அம்மன் அருள் பெற்று, இன்றைய தினம், ஒரே மண்டபத்தில் இவ்வளவு பேர், ஆச்சாரமாக ஆகமத்தை பின்பற்றக் கூடியவர்கள் அமர்ந்து, இந்த சிவ பூஜையை நடத்துவது கண்கொள்ளா காட்சியாக உள்ளது.


திருப்பதியிலே, பெருமாளுக்கு சகஸ்ர தீப அலங்காரம் போன்று, இங்கு, 1,000 தீபம் ஏற்றி, சிவபெருமானை வழிபடக் கூடிய, அபூர்வ பலனை தரக் கூடிய நிகழ்ச்சி நடக்கிறது. நம்முடைய நாட்டை பாதுகாப்பதற்கு, இறைவனுடைய அருள் தேவை. அவன் அருள் நமக்கு கவசமாக இருந்து காப்பாற்ற வேண்டும். அதற்கு, கந்த சஷ்டி கவசம் முதற்கொண்டு, அனைத்து கவசத்தையும் படித்து, பயன்பெற வேண்டும்.


ஆன்மிகத்தை தமிழகம் முழுதும் பரப்ப, இது போன்ற நிகழ்ச்சி நடத்த வேண்டும். ஜனா கர்சனம், தனா கர்சனம் என்று, ஆதி சங்கரர் அந்த காலத்திலே எந்திரங்களை ஸ்தாபித்தார். அது போன்று, தர்மத்தின் மீது ஆவாஹர்சனம் உருவாக்ககூடிய நல்லதொரு முயற்சியாக இந்த நிகழ்ச்சி நடக்கிறது.


இது போன்ற நிகழ்ச்சியை மாவட்டந்தோறும் நடத்தி, அதன் மூலம் ஒவ்வொரு கிராமத்தோடும், நம்முடைய ஆன்மிகத்தை, நாம் இணைத்து கொள்ளக்கூடிய ஒரு வாய்ப்பை உருவாக்க, நம் முயற்சிக்க வேண்டும். அது போன்ற எண்ணத்தை இந்த வேத ஆகம தேவார ஆன்மிக கலாசார மாநாடு, நல்ல ஓர் எண்ணத்தை உருவாக்கி இருக்கிறது.


தர்மத்தின் பலம் என்பது, உபாசானைகளால் மக்களுக்கு கிடைக்கிறது. அந்த உபாசனைகள், சைவத்திலுள்ள, 28 ஆகமங்களால், நமக்கு வேண்டிய மழை, ஆரோக்கியம், செழிப்பு, வம்ச விருத்தி போன்ற எவை நமக்கு நல்லது உண்டோ அவை கிடைக்க வேண்டும். வானத்து தேவர்களை, தேவதைகளை, இந்த பூவுலகத்திற்கு அழைத்து, ஒவ்வொரு கிரா மத்திலும், அனைத்து உயிரினங்களும், மனிதர்கள், விலங்குகள், பறவைகள், மரங்கள், செடிகள், கொடிகள் என, அனைத்து ஜீவ ராசிகளும் நல்ல பலனை பெறுவதற்கான பிரார்த்தனை தான், நம்முடைய கோவில்களில் தினமும் நடக்கும் பூஜை.


தர்மம் தொடர்ந்து படர, கோவில்கள் லட்சியமாக குறிக்கோளாக இருந்து வருகின்றன. அந்த குறிக்கோளுக்கு குறுக்கீடு இல்லாமல், அந்த நோக்கங்கள் நிறைவேற, நிதியும் தேவை, நியமங்களும் தேவை, நிர்வாகமும் தேவை.


கால்களை அலம்பி கொண்டு வருவது முதற்கொண்டு, திருப்பதி கோவிலில் வைத்துள்ளது போன்று, அனைத்து கோவில்களிலும், பக்தர்களுக்கான வசதிகளை, செய்து கொடுத்து, குறைந்தபட்ச நியமங்களையாவது பின்பற்ற வேண்டும்.


தெலுங்கானா மாநிலத்திலே, அர்ச்சகர்கள், புரோகிதர்கள், வேத பண்டிதர்கள், அவரது குடும்பத்திலே நடக்கின்ற திருமணங்களுக்கு, அரசின் மூலமாக, உதவுகின்ற ஒரு திட்டம் உள்ளது. பல யுகங்களாக ஹிந்து சனாதன தர்மம் என்பது வந்து கொண்டிருக்கிறது. பிறப்பு என்பது எப்போது தொடங்கியதோ, அதிலிருந்து ஹிந்து சமயம் என்பது வந்து கொண்டிருக்கிறது.


இவ்வாறு, அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !