புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்ததாக கருதப்படுவது ஏன்?
புரட்டாசி சனிக்கிழமையில் திருவோணத்தன்று வைகுண்டத்தில் இருந்து பெருமாள் பூலோக வைகுண்டமான திருப்பதிக்கு எழுந்தருளினார். அதனால், புரட்டாசி விரதத்தை மேற்கொள்ளும் வழக்கம் உண்டானது. திருப்பதி பிரம்மோற்ஸவமும் புரட்டாசியில் நடத்தப்படுகிறது. கலியுகம் தோன்றிய நாள் முதல், பக்தர்களைக் காப்பதற்காக திருமலையில் வெங்கடேசப்பெருமாள் எழுந்தருளியிருக்கிறார். இதனால் இவருக்கு கலியுகவரதன் என்ற திருநாமம் உண்டு. ரிக் வேதத்தின் எட்டாவது அத்யாயத்தில் வேங்கடேசர் பற்றியும், பழந்தமிழ் இலக்கணமான தொல்காப்பியம், காப்பிய நூலான சிலப்பதிகாரம் போன்றவற்றிலும் வேங்கடமலை பற்றிய குறிப்புகள் உள்ளன. பன்னிருஆழ்வார்களில் பத்துபேர் திருப்பதி வெங்கடேசரை பாடியுள்ளனர். புதன் கிரகத்திற்கு உரிய மாதங்களில் புரட்டாசியும் ஒன்றென்கின்றனர். புதனின் அதி தேவதையாகவும், பிரத்யதி தேவதையாகவும் இருப்பவர் மஹாவிஷ்ணு. ஆகவே விஷ்ணுவின் அருள்பெற உகந்த மாதமாக புரட்டாசி திகழ்கிறது. இந்த மாதத்தை எமனின் கோரைப் பற்களுள் ஒன்றாக அக்னி புராணம் குறிப்பிடுகிறது. எமபயம் நீங்கவும், துன்பங்கள் விலகவும் புரட்டாசி மாதத்தில் காத்தல் கடவுளான விஷ்ணுவை வணங்குவது சிறப்பு.