உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 415ம் ஆண்டு மைசூரு தசரா விழா துவங்கியது; நகரமே விழா கோலம் பூண்டது

415ம் ஆண்டு மைசூரு தசரா விழா துவங்கியது; நகரமே விழா கோலம் பூண்டது

மைசூரு; சாமுண்டீஸ்வரி அம்மன் சிலைக்கு மலர் துாவி பூஜை செய்து மைசூரில் 415 வது ஆண்டு தசராவை, எழுத்தாளர் பானு முஷ்டாக் துவக்கி வைத்தார். 


இன்று முதல் 11 நாட்களும் தசரா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நகரமே விழா கோலம் பூண்டது . உலகப்புகழ் பெற்ற மைசூரு தசரா, மன்னர் காலத்தில் இருந்தே கொண்டாடப்படுகிறது. கடந்த 1610ம் ஆண்டு முதல் முறை கொண்டாடப்பட்டது. போரில் வெற்றி பெறுவதை கொண்டாடும் வகையில், விஜயதசமி என்ற பெயரில் தசரா கொண்டாடினர். யானைகள், குதிரை படைகளுக்கு சிறப்பு பூஜை செய்யப்படும். அப்போது இருந்து ஒவ்வொரு ஆண்டும் பாரம்பரியம், கலாசாரம் மாறாமல் இந்த விழா நடக்கிறது. இந்த ஆண்டிற்கான தசரா இன்று துவங்கி அடுத்த மாதம் 2ம் தேதி வரை 11 நாட்கள் நடக்க உள்ளது. இதுவரை 414 ஆண்டுகள் தசரா கொண்டாடப்பட்ட நிலையில், இன்று துவங்குவது 415 ஆண்டு தசரா.


விருச்சிக லக்கனம் சாமுண்டி மலையில் உள்ள சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு, மலர் துாவி பூஜை செய்வதன் மூலம், ஒவ்வொரு ஆண்டும் தசரா துவங்குகிறது. ஏதாவது ஒரு துறையில் சாதித்தவர்கள் துவக்கி வைக்கின்றனர். இந்த ஆண்டு தசராவை புக்கர் விருது பெற்ற, எழுத்தாளர் பானு முஷ்டாக் துவக்கி வைத்தார். இன்று காலை, 10:10 மணியில் இருந்து 10:46 மணிக்குள், விருச்சிக லக்கனத்தில், வெள்ளி தேரில் வீற்றிருக்கும் சாமுண்டீஸ்வரி அம்மன் சிலைக்கு, பானு முஷ்டாக் மலர் துாவி, தசராவை துவக்கி வைத்தார். முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், அமைச்சர் மஹாதேவப்பா, அதிகாரிகள் பங்கேற்றனர். பாரம்பரிய வரலாறு கொண்ட தசராவை ஒட்டி, மைசூரு நகரமே விழா கோலம் பூண்டு உள்ளது.


மைசூரு சில்க் சாரி பெண்களுக்கு புடவை என்றால் அலாதி பிரியம். அதிலும் மைசூரு சில்க் சாரி என்றால் சொல்லவா வேண்டும். பெண்களை கவர்ந்து இழுக்கும் வகையில், மைசூரு நகரில் உள்ள ஜவுளி கடைகளில், பல டிசைன்களில் மைசூரு சில்க் சாரி விற்பனைக்கு வந்து உள்ளன. இதுபோல ஹேண்ட் பேக், ஹீல்ஸ் என பெண்களுக்கான பொருட்கள் விற்பனைக்காக குவிந்து உள்ளன. மைசூரு பாகு மைசூரு இனிப்பு என்றாலே முதலில் நினைவுக்கு வருவது மைசூரு பாகு தான். சாதாரண நாட்களில் மைசூரு வருவோரே அதிகமாக, மைசூரு பாகு வாங்கி செல்வர். இப்போது பண்டிகை காலம் வேறு, கேட்கவா வேண்டும். மைசூரு பாக் விற்பனை அமோகமாக இருக்கும் என்பதால், ஸ்வீட்ஸ் கடைகளில் வழக்கத்தை விட கூடுதலாக, மைசூரு பாக் தயாரிக்க உள்ளனர். பண்டிகையை ஒட்டி ஆர்டர்களும் குவிந்து வருகின்றன. இதுபோல மைசூரு சாண்டல் சோப், மைசூரு சைக்கிள் அகர்பத்தியும், மைசூரில் தயாரிக்கப்படுகிறது. தசராவுக்கு வருவோர் வாங்கி செல்வர் என்பதால், கணிசமான லாபம் கிடைக்கும். உணவு மேளா தசரா முடிந்த பின், மூன்று நாட்கள் உணவு மேளா நடக்க உள்ளது. இதில் நுாற்றுக்கணக்கான தின்பண்ட கடைகள், சிற்றுண்டி கடைகள் இடம்பெற உள்ளன. இந்த மேளாவில் கிடைக்கும், மூங்கில் குழாய் பிரியாணிக்கு டிமாண்ட் அதிகம். வனப்பகுதியில் வசிக்கும் ஆதிவாசி மக்கள் இந்த பிரியாணியை தயார் செய்கின்றனர். ஒவ்வொரு ஆண்டு உணவு மேளாவிலும், மூங்கில் குழாய் பிரியாணிக்கு தான் முதல் இடம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !