காளஹஸ்தி கனகாசல மலை கனக துர்கை அம்மன் கோயிலில் நவராத்திரி துவக்கம்
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் துணை கோயில்களான கனகாசல மலை மீது வீற்றிருக்கும் கனக துர்கை அம்மன் கோயிலில் இன்று தேவி நவராத்திரி விழா துவங்கியது. விழாவை யொட்டி காலையில் கலசம் வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.தொடர்ந்து கனகதுர்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் துர்கை அம்மனை சிறப்பு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீப தூப நெய்வேத்தியங்கள் சமர்ப்பிக்கப்பட்டது.
இதே போல் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வீற்றிருக்கும் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் ஸ்ரீ சைலபுத்ரி தேவி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதேபோல் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் துணைக்கோயிலான ஏழு கங்கை அம்மன் கோயிலில் கங்கை அம்மன் சைலப்புத்ரி தேவி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மேலும் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் அடுத்துள்ள வேடாம் கிராமத்தில் வீற்றிருக்கும் காளிகா தேவி அம்மன் ஆனந்த பைரவி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஸ்ரீகாளஹஸ்தி வாசவி கன்னிகா பரமேஸ்வரி தேவஸ்தானத்தில் திருவாரூர் தியாகராஜ ஸ்வாமி மற்றும் கமலாம்பிகா தேவி அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பானகல் பகுதியில் வீற்றிருக்கும் பொன்னாலம்மன் பால திரிபுரசுந்தரி தேவி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஸ்ரீ காளஹஸ்தி நகரிலும் அதன் சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ள அம்மன் கோயில்களில் நவராத்திரி விழாவை யொட்டி பல்வேறு அலங்காரங்களில் அம்மனை விளக்கேற்றி பக்தர்கள் வழிபாடு செய்தனர்.