உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலையில் கட்டுக்கடங்கா கூட்டத்தால் காட்டில் பக்தர்கள் தவிப்பு!

சபரிமலையில் கட்டுக்கடங்கா கூட்டத்தால் காட்டில் பக்தர்கள் தவிப்பு!

சபரிமலை: சபரிமலையில் நேற்று, தங்க அங்கி அணிவித்து, தீபாராதனை நடந்தது. மண்டல பூஜைக்காக, சபரிமலையில் திரண்ட பக்தர்கள், நடுக்காட்டில் தவிக்கின்றனர். ஆரன்முளாவில் இருந்து புறப்பட்ட தங்க அங்கி, நேற்று பகல் ஒரு மணிக்கு பம்பை வந்தது. பக்தர்கள் மற்றும் தேவசம்போர்டு வரவேற்புக்கு பின்னர் மாலை 3:30 மணிக்கு, பேடகத்தில் அங்கி வைக்கப்பட்டு, அய்யப்ப சேவா சங்கத்தினர் தலைச்சுமையாக எடுத்து வந்தனர். 5:40 மணிக்கு, சரங்குத்திக்கு வந்த அங்கிக்கு, தேவசம்போர்டு சார்பில் வரவேற்பு கொடுக்கப்பட்டது. 6:15 மணிக்கு, 18 படி வழியாக வந்த அங்கியை, தந்திரி கண்டரரு ராஜீவரரு, மேல்சாந்தி தாமோதரன் போற்றி ஆகியோர் வாங்கி, நடை அடைத்து, அங்கியை அணிவித்தனர். தொடர்ந்து நடை திறந்து தீபாராதனை நடந்தது. இதில் கேரள தேவசம்போர்டு அமைச்சர் சிவக்குமார், தேவசம்போர்டு தலைவர் கோவிந்தன் நாயர், சபரிமலை திருவிழா ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார், பி.ஆர்.ஓ., முரளிதரன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டம்: மகரவிளக்கு நாளை மிஞ்சும் அளவு, பக்தர்கள் கூட்டம், கடந்த மூன்று நாட்களாக, சபரிமலையில் அலைமோதுகிறது. கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். இன்று காலை 11:00 மணி வரை மட்டுமே நெய்யபிஷேகம் நடைபெறும் என்பதால், காட்டில் பரிதவிக்கும் பக்தர்கள், மலையேறி வந்து, படியேறி அபிஷேகம் செய்ய முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !