நாட்டரசன்கோட்டையில் புரட்டாசி பிரமோத்ஸவ திருக்கல்யாணம் கோலாகலம்
சிவகங்கை; நாட்டரசன்கோட்டை பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலில் புரட்டாசி பிரமோத்ஸவ விழாவை முன்னிட்டு ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாளுக்கு திருக்கல்யாணம் நடந்தது. சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட இக்கோயிலில் புரட்டாசி பிரமோத்ஸவ விழா செப்., 25 அன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலையில் காலசந்தி ஹோமம் , பலி, திருவீதி உலா நடைபெற்று வருகிறது. இரவில் ஸ்ரீதேவி பூதேவி சமேத பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் அன்னம், சிம்மம், அனுமன், சேஷ, யானை, வெள்ளி கேடயம், குதிரை வாகனங்களில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.விழாவின் 6 ம் நாளான இன்று காலை 11:00 மணிக்கு திருக்கல்யாணத்தை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்தனர். இன்று மதியம் 12:05 மணிக்கு பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியருக்கு திருமாங்கல்யம் அணிவிக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று இரவு கோயிலில் சாயரட்சை, ஹோமம், திருவாராதனம் நடக்கிறது.புன்னைமர வாகனத்தில் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியருடன் திருவீதி உலா வந்தார். விழாவின் முக்கிய நிகழ்வாக அக்.,3 ம் தேதி காலை அலங்கரிக்கப்பட்ட தேரில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் எழுந்தருள்வார். சிறப்பு அபிஷேக ஆராதனை நடத்திய பின் தேங்காய்கள் உடைத்து அன்று காலை 9:10 முதல் 10:25 மணிக்கு தேரோட்டம் துவங்குகிறது. அக்.,4 ல் தீர்த்தவாரி உற்சவம், மாலையில் கொடியிறக்கமும் நடைபெறும். அக்., 5 ல் ஊஞ்சல் உற்சவத்துடன் பிரமோத்ஸவ விழா நிறைவு பெறுகிறது. தேவஸ்தான கண்காணிப்பாளர் கணபதிராமன் தலைமையில் ஏற்பாடுகளை செய்தனர்.