உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அருவங்காட்டில் துர்கா பூஜை பெங்காலி மக்களின் சிந்துாரம் திருவிழா

அருவங்காட்டில் துர்கா பூஜை பெங்காலி மக்களின் சிந்துாரம் திருவிழா

குன்னுார்; அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் பெங்காளி இன மக்களின், சிந்துாரம் திருவிழா நடந்தது.
குன்னுார் அருகே அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் ஆண்டுதோறும், ‘நீலகிரி சர்போஜனின் துர்கா சப்‘ அமைப்பு சார்பில், நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. 64-வது ஆண்டு நவராத்திரி துர்கா பூஜை விழா, மகா சாஸ்தி பூஜையுடன் கடந்த, 28 ல் துவங்கியது. தினமும் மகா சப்தமி பூஜை, புஷ்பாஞ்சலி, ஆரத்தி, அன்னதானம், சந்தியா ஆரத்தி, இன்னிசை நிகழ்ச்சி, பஜனை உட்பட கலாசார நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று ‘பிரபஞ்சம் அனைத்தும் அம்மனின் காலடியில் அடக்கம் என்பதை குறிக்கும் வகையில், அம்மனின் கால் பாதத்தை கண்ணாடியில் பார்த்து பக்தர்கள் வழிபடுதல், சுமங்கலி பூஜை, அம்மனுக்கு செந்துாரம் திலகமிடும் குங்கும் வழிபாடு,’ உட்பட பல்வேறு பூஜைகள் நடந்தன. சுமங்கலி பூஜையை மகளிர் நடத்தி வழிபட்டனர். மகளிரும் நெற்றியில் செந்துாரம் இட்டு வழிபட்டனர். மேலும், குழந்தைகளுக்கு எழுத்தறிவு கொடுக்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து, வழிபாட்டுக்கு வைக்கப்பட்ட சிலைகள் ஊர்வலமாக எடுத்து சென்று, காட்டேரி அணையில் கரைக்கப்பட்டது. பூஜை நிகழ்ச்சிகளில், மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா, கார்டைட் தொழிற்சாலை முதன்மை பொது மேலாளர் விகாஸ் பூர்வார், உதவி பொது மேலாளர் ராஜிவ் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை, நீலகிரி சர்போஜனின் துர்கா சப் அமைப்பு செயலாளர் சதான் குமார் கோஷ், ஒருங்கிணைப்பாளர் சின்கா, இணை செயலாளர் சங்கர் தாஸ், பொருளாளர் சாந்தனு மற்றும் பெங்காளி இன மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !