உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புரட்டாசி பவுர்ணமி; திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்

புரட்டாசி பவுர்ணமி; திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்

திருவண்ணாமலை; திருவண்ணாமலையில், புரட்டாசி மாத பவுர்ணமியையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று,  6 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை வழிபட்டனர். பக்தர்கள் கூட்டத்தால், திருவண்ணாமலை மிதந்தது. 


திருவண்ணாமலையிலுள்ள, 2,668 அடி உயர அண்ணாமலையால் மலையையே பக்தர்கள் சிவனாக வழிபட்டு வருகின்றனர். இதனால் மாதந்தோறும் பவுர்ணமி நாளில், லட்சக்கணக்கான பக்தர்கள், 14 கி.மீ., சுற்றளவு உள்ள மலையை கிரிவலம் சென்று, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை வழிபட்டு செல்கின்றனர். இதில்,  புரட்டாசி மாத பவுர்ணமி திதி நேற்று காலை, 11:43 மணி முதல் இன்று, 7ம் தேதி காலை, 9:50 மணி வரை உள்ளது. இதனால், நேற்று காலை முதலே பல்வேறு பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்ல துவங்கினர். பக்தர்களின் வசதிக்காக பல்வேறு பகுதிகளிலிருந்து, சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பக்தர்களின் பாதுகாப்பு பணிக்காக, 500க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர். பக்தர்கள் கோவிலில், 6 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து, சுவாமி தரிசனம் செய்தனர்.  மேலும், கிரிவல பாதை முழுவதும், பக்தர்களுக்கு அன்னதானம், மோர், பழரசம் உள்ளிட்ட பல்வேறு குளிர்பானங்கள் இலவசமாக வழங்கப்பட்டது.  திருவண்ணாமலை நகருக்குள் கார், வேன், மற்றும் கனரக வாகனங்கள் நுழைய, நேற்றும், இன்றும், 2 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !