உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காத்திருந்த கண்கள்

காத்திருந்த கண்கள்

மகாராஷ்டிரா, பண்டரிபுரம் சந்திரபாகா நதிக்கரையில் முகாமிட்டிருந்தார் காஞ்சி மஹாபெரியவர். பக்தை ஒருவர் சுவாமிகளுக்கு பூக்கள், பழங்களை சமர்ப்பிக்க விரும்பினாள். அவர் தங்கிய விடுதிக்கு அருகில் துளசி மட்டுமே கிடைத்தது. இரண்டு துளசி கட்டுகளை வாங்கி மாலையாகத் தொடுத்தாள். 

படகில் ஏறி முகாமை அடைந்த அவள், மஹாபெரியவரிடம் துளசி மாலையை சமர்ப்பித்தாள். ஆனால் சுவாமிகள் அதைக் கையால் தொடவில்லை. வாடிய முகத்துடன் வெளியே வந்து நதியைப் பார்த்தபடி உட்கார்ந்தாள். சற்று நேரத்தில்  குடும்பத்துடன் ஒருவர் வந்தார். அவருடன் வந்த சிலர், சிலை ஒன்றை கொண்டு வந்தனர்.  ‘‘எஜமான்... வயலை உழுத போது இந்தச் சிலை கிடைத்தது. தங்களின் ஆசி பெற இங்கு வந்தோம்’ என்றார் அவர்.

அது லட்சுமிநாராயணர் சிலை! பார்க்க அழகாக இருந்தது.

அருகில் இருந்த கமண்டல தீர்த்தத்தால் அபிஷேகம் செய்து விட்டு, துளசி மாலையை சிலைக்கு அணிவித்தார் சுவாமிகள். அது கச்சிதமாக இருந்தது. லட்சுமி நாராயணர் சிலையை வணங்கினார் மஹாபெரியவர். துளசியை கொடுத்த பக்தையை அழைத்து வரச் சொன்னார். அவள் உள்ளே வந்த போது அவளைப் பார்த்து புன்னகைத்தார்.

‘இந்த லட்சுமிநாராயணர் சிலை வர இருந்ததால் தான் மாலையுடன் காத்திருந்தேன்’ என கண்களால் சுவாமிகள் தெரிவிக்க, பக்தைக்கு கண்ணீர் பெருகியது. 

எப்போது எப்படி எதை பயன்படுத்த வேண்டும் என மஹாபெரியவருக்கு தெரியாதா...


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !