திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றில் கிடைத்த அழகிய தீர்த்தங்கரர் சிற்பம்
திருநெல்வேலி; தாமிரபரணி ஆற்றின் கடைசி தடுப்பணை அருகே கிடைத்த அழகிய தீர்த்தங்கரர் சிற்பம் சுமார் 1100 ஆண்டுகள் பழமையானதாகும்.
திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் துவங்கி தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயலில் கடலில் சேரும் தாமிரபரணி ஆற்றில் ஆத்தூர் அருகே சேர்ந்தபூமங்கலம் பகுதியில் உள்ள தடுப்பணையில் ஒரு அழகிய தீர்த்தங்கரர் சிலை கிடைத்துள்ளது. 9ம் நூற்றாண்டு முதல் 12ம் நூற்றாண்டு வரையிலான தொன்மை கொண்டதாக உள்ளது. தீர்த்தங்கரர் தியான நிலையில் உள்ளார். அவரின் இருபுறங்களிலும் யக்க்ஷன், யஷிணி உள்ளனர். சிலையில் தீர்த்தங்கரரை சுற்றிலும் பூ வேலைப்பாடுகள் உள்ளன. யானை துதிக்கையை தூக்கி நிற்பது போலவும் உள்ளது. சிலை ஒரே கிரானைட் கல்லால் ஆனது. இத்தனை காலம் நீரில் கிடந்தாலும் எவ்வகையிலும் சிலை சேதம் அடையவில்லை. திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை தொல்லியல் துறை பேராசிரியர் டாக்டர் சுதாகர் கூறுகையில், தீர்த்தங்கரர் சிலையை நேரில் ஆய்வு செய்ய உள்ளோம். அதன் அருகில் தான் தொன்மையான கொற்கை உள்ளது. அங்கு வழிபாட்டுத் தலங்கள் எதுவும் உள்ளதா எனவும் ஆய்வு செய்ய உள்ளோம் என்றார். திருநெல்வேலி தூத்துக்குடி தென்காசி மாவட்டங்களில் கிடைத்த இத்தகைய சமணர் சிற்பங்கள் திருநெல்வேலி அரசு அருங்காட்சியத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.