அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான மண்டபங்களில் பராமரிப்பு பணிகள் துவங்கம்
அவிநாசி; அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான அவிநாசிப்பர் மற்றும் கருணாம்பிகை ஆகிய திருமண மண்டபங்கள் மராமத்து புனரமைக்கும் பணிகள் துவங்கியது.
அவிநாசி கோவை ரோட்டில் இந்து சமய அறநிலையத்துறையின், அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 1.80ஏக்கர் பரப்பளவில் உள்ள கருணாம்பிகை திருமண மண்டபம், அவிநாசியப்பர் திருமண மண்டபம் என இரு மண்டபங்களும் ரூ.1.55 கோடி மதிப்பில் மராமத்து பராமரிப்பு பணிகள் செய்வதற்கான வேலை துவங்கியது. இதில் அவிநாசியப்பர் மண்டபம் ரூ.56 லட்சம் மதிப்பிலும்,கருணாம்பிகை அம்மன் மண்டபம் ரூ.99 லட்சம் மதிப்பிலும் புனரமைக்கும் வேலைகள் நடைபெற உள்ளது. அதில் முதல் கட்டமாக, இரு மண்டபங்களிலும் உள்ள வரவேற்பு வளாகத்தில் சிமெண்ட் சீட்டுகள் பிரிக்கப்பட்டு அதற்கு பதிலாக கலர் ரூபிங் சீட்டுகள் போடப்பட உள்ளது. மேலும் மண்டபம் முழுவதும் பெயிண்ட் அடிப்பது,மின்சாதன பொருட்கள் புதிதாக மாற்றம் செய்வது,மண்டபத்தின் உள் அரங்கில் ஸ்பான்ச் வைத்த அலுமினிய பிரேமுடன் ஒட்டப்பட்ட ரூபிங் சீட்டுகள் போட உள்ளது. இரு மண்டபங்களிலும் மராமத்து பராமரிப்பு பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. இந்து சமய அறநிலைத்துறையின் கீழ் நடைபெறும் மராமத்து பணிகள் முடிந்தவுடன் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இரு திருமண மண்டபங்களையும் திருமணம், சீர்,வளைகாப்பு மற்றும் இதர சுப காரியங்களுக்காக முன் பதிவு செய்து விழாக்களை நடத்தி பயன்பெறலாம் என அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் செயல் அலுவலர் சபரீஷ் குமார் கூறினார்.