திருமலைராயன்பட்டினம் பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்
காரைக்கால்; காரைக்கால் அடுத்த திருமலைராயன்பட்டினத்தில் அமைந்துள்ள புகழ் பெற்ற ஸ்ரீ அலமேலுமங்கை தாயார் சமேத பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோவிலில் புரட்டாசி திருக்கல்யாண உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்கால் அடுத்த திருமலைராயன்பட்டினத்தில் அமைந்துள்ளது புகழ் பெற்ற ஸ்ரீ அலமேலுமங்கை தாயார் சமேத ஸ்ரீபிரன்ன வெங்கடேச பெருமாள் கோவில். இக்கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் ஸ்ரீ வெங்கடேச பெருமாள்-ஸ்ரீ அலமேலுமங்கை தாயார் திருக்கல்யாணம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு ஸ்ரீவெங்கடேச பெருமாள்-ஸ்ரீஅலமேலுமங்கை தாயார் திருக்கல்யாணம் நேற்றிரவு வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக ஊஞ்சல், மாலை மாற்றுதல் நிகழ்ச்சியை தொடர்ந்து வைதீக முறைப்படி நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தில் கங்கணம் கட்டுதல், புது வஸ்திரம் சாற்றுதல்,மாங்கல்யதாரணம் நடைபெற்றதை தொடர்ந்து சக்ர ஆரத்தி,கோபுர ஆரத்தி,சோடச ஆராதனை,பஞ்ச கற்பூர ஆரத்தியுடன் மகாதீபாராதனை நடைபெற்றது.புரட்டாசி மாத பெருமாள்-தாயார் திருக்கல்யாண உற்சவத்தில் ஆலய அறங்காவலர் குழுவினர் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.பெருமாள் திருக்கல்யாணத்திற்கு வருகை தந்த பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.