உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அஞ்ஞானத்தை அழிக்கும் வீரபத்ரேஸ்வரர் துாண்கள் நகரும் அதிசயம்

அஞ்ஞானத்தை அழிக்கும் வீரபத்ரேஸ்வரர் துாண்கள் நகரும் அதிசயம்

பீதர் மாவட்டம் ஹூம்னாபாத்தில் உள்ளது ஸ்ரீவீரபத்ரேஸ்வரர் கோவில். 1725ல் ராஜா ராமசந்திர ஜாதவ் என்பவரால் கட்டப்பட்டது.


சிவபெருமானின் மற்றொரு வடிவமான வீரபத்ரருக்கு அர்ப்பணிக்கப்பட்ட இக்கோவில் நகரும் துாண்களுக்கு பிரபலமானது. இக்கோவிலில் 50 அடி உயரத்தில் இரண்டு விளக்கு துாண்கள் உள்ளன.


தட்சன் அழைப்பு புராணங்கள்படி தட்சனின் மகளான தாட்சாயிணி, சிவன் மீது அன்பு கொண்டிருந்தார். அவரின் சுயம்வரத்துக்கு, சிவனை தவிர்த்து மற்ற அனைத்து கடவுளுக்கும் தட்சன் அழைப்பு விடுத்தார். சிவன் மீது அன்பு கொண்ட பார்வதி, தன் கையில் இருந்த மாலையை, வானத்தை நோக்கி வீசினார்.


அது நேராக சிவன் கழுத்தில் விழுந்தது. கழுத்தில் மாலையுடன் சுயம்வரம் நடக்கும் இடத்துக்கு சிவன் வந்தார். வேறு வழியின்றி, சிவனுக்கு, மகளை தட்சன் கட்டி கொடுத்தார்.


ஜுவாலமுகி தேவி சிவபெருமானை அவமானப்படுத்த வேண்டும் என்று எண்ணிய தட்சன், யாகம் ஒன்று நடத்தினார். இதற்கும், சிவனை அழைக்காமல், மற்ற கடவுள்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.


பெற்றோர் மீதான பாசத்தில், அழைக்காமல் இருந்தாலும் அவரின் யாகத்தில் தாட்சாயிணி பங்கேற்றார். இதை பார்த்த அவரது தந்தை, அனைவரின் முன்னிலையிலும், அவரை அவமதித்தார். இதனால் அவமானம் அடைந்த அவர், யாகத்தில் விழுந்து உயிரிழந்தார். அவர் இறந்த இடம் ‘ஜுவாலமுகி தேவி’ என்று பிரபலமானது. இதை அறிந்த சிவன், கோபத்தில் தன் நெற்றிக்கண்ணில் இருந்து வீரபத்திரரை உருவாக்கினார்.


யாகத்தை அழிக்க அனுப்பி வைத்து, தட்சனையும் தண்டித்தார். இவர், அஞ்ஞானத்தை அழிப்பவர் என்று நம்பப்படுகிறது. அவரது உயரமான உடல், வானத்தை அடைந்தது. மேகங்களை போன்று கருமையாக இருந்தார். மூன்று எரியும் கண்கள், உமிழும் முடி, மண்டை ஓடுகளால் ஆன மாலை அணிந்திருந்தார். பயங்கரமான ஆயுதங்களையும் வைத்திருந்தார். அவருக்கு சக்தி வழங்க, பத்ரகாளி வந்தார்.


வீரசைவ லிங்காயத், பஞ்சம ஆச்சார்யர்களின் முதன்மை கடவுள்களில் ஒருவராக உள்ளார். இவரை தரிசிக்க, கர்நாடகா மட்டுமின்றி, தமிழகத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.


இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவில் வெளிப்புறத்தில் மண்டபம் போன்று காணப்படும். உள்ளே சென்றால் பெரிய வராண்டாவாக இருக்கும். கருவறையில் வீரபத்ரேஸ்வரர் அருள்பாலிக்கிறார். கோவில் உட்புறத்தில் தெப்பகுளம் அமைந்து உள்ளது. இந்த குளத்தை நோக்கியபடி சிவனின் வாகனமான நந்தி அருள்பாலிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !