சிதிலமடைந்த புல்லுகுடி சிவன் கோயில் புனரமைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா
திருவாடானை: ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே புல்லுகுடியில் பழமை வாய்ந்த கைலாசநாதர் சிவன் கோயில் பராமரிப்பின்றி கருவறை உட்பட கட்டுமானங்கள் சிதிலமடைந்துள்ளன. கோயிலை புனரமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
திருவாடானை தாலுகாவில் பல்வேறு கிராமங்களில் பாண்டியர், சோழ மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் நிறைய கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. கோயிலில் நித்ய பூஜை செய்யவும், பராமரிப்புக்கும், பூஜைக்கு தேவையான பொருட்களுக்கும் நிலங்கள் தானமாக வழங்கப்பட்டன. மேலும் பூஜை செய்பவர்களின் வாழ்வாதாரத்திற்காக நிலங்கள் வழங்கப்பட்டன. திருவாடானை அருகே புல்லுகுடி கிராமத்தில் ராமநாதபுரம் தேவஸ்தானத்திற்கு சொந்தமான கைலாசநாதர், அகிலாண்டேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட இக்கோயில் பராமரிப்பின்றி சிதிலமடைந்துள்ளது. கர்ப்பகிரகத்தின் முகப்பு பகுதி ஓடுகளால் அமைக்கபட்ட கூரை மற்றும் சுற்றுபுற சுவர்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளது. கோயிலுக்கு சொந்தமான இடத்தில் சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்துள்ளது. இக்கோயிலை புனரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புல்லுகுடி நல்லபெருமாள் கூறியதாவது: இக்கோயிலுக்குள் நந்தி, விநாயகர், சூரியன், சந்திரன், பைரவர் போன்ற சிலைகள் உள்ளன. அழகாக காட்சியளிக்கும் இச்சிலைகள் பராமரிப்பில்லாமல் உள்ளது. கோயில் வளாகத்தில் கிடக்கும் கல் துாண்களில் கல்வெட்டுகள் உள்ளன. சுவர்கள் எப்போது வேண்டு மென்றாலும் விழக் கூடிய அபாயத்தில் உள்ளது என்றார். செல்லம் கூறுகையில், இக்கோயில் திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயில் அமைப்பு போல் கட்டபட்டுள்ளது. கிழக்கு பார்த்து சிவனும், தெற்கு பார்த்து அம்மன் இருக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. இக்கோயிலில் உள்ள பல சிலைகளை திருடர்கள் திருடிச் சென்று விட்டனர். தினமும் ஒரு கால பூஜை செய்யப்படுகிறது. பராமரிக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தாலும் எந்த பலனும் இல்லை. பழமையை இழக்காமல் புனரமைத்து பாதுகாக்க இனியாவது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத் தலைவர் ராஜகுரு கூறியதாவது: புல்லுகுடியில் அம்மன் சன்னதியுடன் ஒரு சிறிய சிவன் கோயில் உள்ளது. இங்கு 10 கல்வெட்டுகளை நாங்கள் கண்டெடுத்துப் பதிவு செய்துள்ளோம். இதில் 1201-ம் ஆண்டு முதலாம் சடையவர்மன் குலசேகர பாண்டியனின் மெய்க்கீர்த்திக் கல்வெட்டைத் தவிர மற்றவை துண்டுக் கல்வெட்டுகள். இதில் இவ்வூர் அரும்பொற்கூற்றத்து புலிகுடி எனவும், கடவுள் பெயர் ஸ்ரீகயிலாயமுடையார் எனவும் உள்ளது. கோயில் தேவகன்மி, சிவப்பிராம்மணருக்கு செய்வதாக கொடுத்த வாக்குப் படி, கடவுளுக்குப் படைக்கத் தேவையான நிவந்தங்களுக்காக, அரும்பொற்கூற்றத்தில் உள்ள வாகைக்குடி, சாத்தி ஏரி ஆகிய இரு ஊர்களை தேவதான இறையிலியாய், அந்தராயம் எனும் உள்வரியையும் நீக்கி இக்கோயிலுக்கு மன்னர் வழங்கியுள்ளார். துண்டுக் கல்வெட்டுகளில் 8 பாண்டியர் காலத்தைச் சேர்ந்தவை. இதில் முன்னுாறு பர்கும் நாழி, நெல்லரிசி, மரகறியும் தயிர் பாலும், ஸ்ரீகிருஷ்ண பட்டர், அமுதுபடி, சாத்துப்படி ஆகிய சொற்களைக் கொண்டு13-ம் நுாற்றாண்டில் பிற்காலப் பாண்டியர் ஆட்சியில் இக்கோயிலுக்கு மேலும் சில தானங்கள் கொடுக்கப்பட்டிருப்பதை அறிய முடிகிறது. இதில் சடையவர்மன் வீரபாண்டியன் பெயரும் ஒரு கல்வெட்டில் வருகிறது. சறுவதாரி ஆண்டு சித்திரை மாதம் 3-ம் நாள் அரும்பூர்க்கூற்றத்து புலிகுடியும், மலரியும் இக்கோயிலுக்குத் தானமாக கொடுக்கப்பட்டதை ஒரு கல்வெட்டு தெரிவிக்கிறது. இதற்கு கெடுதல் செய்பவர்கள் பிரம்மஹத்தி தோஷத்தில் போவார்களாக என அது எச்சரிக்கிறது. இறுதியில் திருவிருந்த பெருமாள்பிள்ளை என்பவர் பெயர் உள்ளது. இதன் தமிழ் ஆண்டைக் கொண்டு இது 1648 திருமலை ரெகுநாத சேதுபதி காலத்தைச் சேர்ந்தது எனலாம் என்றார்.