கன மழையால் நிரம்பியது சிதம்பரம் நடராஜர் கோவில் சிவகங்கை குளம்
ADDED :11 minutes ago
சிதம்பரம்.: சிதம்பரத்தில் தொடர்ந்து பெய்த கன மழை காரணமாக, நடராஜர் கோவில் குளம் நடைபாதை வரை தண்ணீர் நிரம்பியது.
கடலுார் மாவட்டத்தில், கடந்த ஒரு வாரகாலமாகவே, அவ்வப்போது கன மழை மற்றம் மிதமான மழை பெய்து வந்தது. இதனால் தீபாவளி பண்டிகைக்கு ஜவுளி மற்றும் பொருட்கள் வாங்க கூட பொதுமக்கள் கடை வீதிகளுக்கு செல்ல முடியாமல் தவித்து வந்தனர். இந்நிலையில், தீபாவளிக்கு முன்தைய தினம், ஒரு நாள் மட்டும் குறைந்திருந்தது. இதற்கிடையில் நேற்று முன்தினம் இரவு முதல் மீண்டும் கன மழை துவங்கி பெய்து வருகிறது. இதனால் சிதம்பரம் மற்றும் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும், சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குள் அமைந்துள்ள சிவகங்கை தீர்த்தக்குளத்தில் தண்ணீர் அதிகரித்துள்ளது. குளத்தை சுற்றியுள்ள சுற்றுப்புற பாதை தண்ணீர் மூழ்கியுள்ளது.