சபரிமலை துவாரபாலகர் சிலையில் தங்கம் மாயம் தேவதேவசம்போர்டு துணை ஆணையர் கைது
திருவனந்தபுரம்; சபரிமலையில் ஸ்ரீ கோயில் முன்புறம் உள்ள துவார பாலகர் சிலைகளில் இருந்து தங்கம் மாயமானது தொடர்பாக திருவிதாங்கூர் தேவசம் போர்டின் துணை ஆணையரும், முன்னாள் சபரிமலை நிர்வாக அதிகாரியுமான முராரி பாபுவை தனிப்படை போலீசார் நேற்றை கைது செய்தனர்.
சபரிமலை ஐயப்பன் ஸ்ரீ கோயில் முன்புறம் இரு பக்கங்களிலும் துவார பாலகர் சிலை உள்ளது. இது தங்கத் தகடுகளால் பாதிக்கப்பட்டிருந்தது. 2019 - ம் ஆண்டு மீண்டும் தங்க முலாம் பூசுவதற்காகவும் அதில் ஏற்பட்டுள்ள பழுதுகளை சரி செய்வதற்காகவும் சென்னை கொண்டு செல்லப்பட்டது. திருவனந்தபுரத்தைச் சேர்ந்த உன்னிகிருஷ்ணன் போற்றி என்பவர் இதை பொறுப்பேற்று சென்னைக்கு கொண்டு சென்றார். அப்போது சபரிமலை கோயில் நிர்வாக அதிகாரியாக இருந்த முராரி பாபு பதிவேடுகளில் செம்பு தகடு என்று சான்றிதழ் அளித்திருந்தார். செம்பு தகடுகளில் தங்க முலாம் பூசுவதற்காக உன்னிகிருஷ்ணனிடம் கொடுத்து விடலாம் என்றும் பரிந்துரை செய்திருந்தார். தங்கத்தகடுகளை செம்பு தகடு என்று பதிவிட்டதால் தேவசம்போர்டு துணை ஆணையர் முராரி பாபு சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவரை நேற்று முன்தினம் அழைத்து சென்ற தனிப்படை போலீசார் நேற்று காலை அவரை கைது செய்தனர். விசாரணைக்கு பின்னர் அவர் பத்தனம்திட்டா மாவட்டம் ரான்னி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். முராரி பாபு 2019-ல் சபரிமலை நிர்வாக அதிகாரியாகவும், கடந்த ஆண்டு சீசனில் செயல் அலுவலராகவும் பணியாற்றினார். சில மாதங்களுக்கு முன் இவர் துணை ஆணையராக பதவி உயர்வு பெற்றிருந்தார்.