சிங்காரவேலவருக்கு ‘வியர்க்கும் மகிமை’ சிக்கல் கோவிலில் பக்தர்கள் பரவசம்
நாகப்பட்டினம்: நாகை அடுத்த சிக்கலில், அறுபடை வீடுகளுக்கு இணையான சிங்காரவேலவர் கோவில் உள்ளது. முருகப்பெருமானின் அவதார நோக்கமான, சூரசம்ஹாரத்திற்கு இக்கோவிலில் தான், அன்னை வேல்நெடுங்கண்ணியிடம் சக்திவேல் வாங்கி, திருச்செந்துாரில் சூரனை முருகர் சம்ஹாரம் செய்ததாக கந்தபுராணம் கூறுகிறது.
கோச்செங்கட் சோழனால் கி.பி., 4 ம் நூற்றாண்டில் கட்டப்பட்டு சமயக்குரவர்களால் பாடல் பெற்ற இக்கோவிலில் கந்தசஷ்டி விழா கடந்த 21ம் தேதி துவங்கியது. தினமும் பல்வேறு வாகனங்களில் முருகப்பெருமான் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கந்த சஷ்டியின் 6 ம் நாள் விழாவான நேற்று சிங்காரவேலர் தேவியருடன் அதிகாலை திருத்தேரில் எழுந்தருளி வீதியுலா வந்தார். திருச்செந்தூரில் இன்று சூரனை சம்ஹாரம் செய்வதற்காக, நேற்றிரவு அன்னை வேல்நெடுங்கண்ணியிடம் சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சிக்காக, திருத்தேரில் வீதியுலா வந்த முருகப்பெருமான் ஆவேசத்துடன் கோவிலுக்குள் வந்து அன்னையிடம் சக்திவேல் வாங்கும் நிகழ்வு நடந்தது. அன்னையிடம் சக்திவேலை பெற்று தனது சன்னதியில் அமர்ந்த முருகப் பெருமானுக்கு, முகம் உள்ளிட்ட உடல் முழுவதும் வியர்வை பொழியும் மகிமை நடந்தது. இந்த காட்சி, பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது.