உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரம் கோயில் விமானம் சேதம்: ஹிந்து அறநிலையத்துறை பாராமுகம்

ராமேஸ்வரம் கோயில் விமானம் சேதம்: ஹிந்து அறநிலையத்துறை பாராமுகம்

ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோயிலில் விமானம் சேதமடைந்த விமானத்தை மராமத்து செய்யாமல் ஹிந்து அறநிலையத்துறையினர் அலட்சியமாக உள்ளனர். இதற்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.


2016ல் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சுவாமி, அம்மன் சன்னதி மற்றும் விமானங்கள், 3ம் பிரகாரத்தில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடந்தது. இந்நிலையில் கோயில் மேற்கு பகுதி 3ம் பிரகாரத்தில் உள்ள அக்னி ஈஸ்வரர் சன்னதி விமானத்தில் சிமெண்ட் கலவை பெயர்ந்து சேதமடைந்து கிடக்கிறது. இதனை சரி செய்ய பக்தர்கள் பல முறை வலியுறுத்தியும் ஹிந்து அறநிலையத்துறை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. இந்நிலையில் சேதமடைந்த விமானத்தை புதுப்பிக்காவிடில் வரும் மழைக்காலத்தில் நீர்கசிவு ஏற்பட்டு விமானம் முழுவதும் சேதமடையும் அபாயம் உள்ளது.


இதுகுறித்து ராமநாதபுரம் மண்டல வி.எச்.பி., அமைப்பாளர் அ.சரவணன் கூறுகையில் : ராமேஸ்வரம் கோயிலில் உண்டியல் காணிக்கை, தீர்த்தம் நீராடல், தரிசன கட்டணம் என ஓராண்டுக்கு ரூ.30 கோடி வருமானம் வரும் நிலையில், அக்னி ஈஸ்வரர் சன்னதி விமானம் சேதமடைந்து பல மாதங்கள் ஆகியும், ஹிந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மராமத்து செய்து புதுப்பிக்காமல் அலட்சியமாக உள்ளனர். கோயில் வருவாய்க்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கும் தமிழக அரசு, கோயில் பாரம்பரியத்தை பாதுகாக்க முன்வராது. எனவே ராமேஸ்வரம் கோயிலை மத்திய தொல்லியல்துறை கையகப்படுத்தி கலாச்சாரம், பண்பாடுகளை பாதுகாக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !