உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி கோயில் வின்ச் கட்டண மாற்ற கருத்து கேட்பு; கட்டணத்தை அதிகரிக்க பக்தர்கள் எதிர்ப்பு

பழநி கோயில் வின்ச் கட்டண மாற்ற கருத்து கேட்பு; கட்டணத்தை அதிகரிக்க பக்தர்கள் எதிர்ப்பு

பழநி; பழநி முருகன் கோயிலுக்கு செல்ல பயன்படும் வின்ச் ஸ்டேஷன் கட்டணங்கள் 3 வகையாக உள்ளன. அவற்றை ஒரே கட்டணமாக மாற்ற கோயில் நிர்வாகம் சார்பில் நவ., 5 வரை ஆலோசனை மற்றும் ஆட்சேபனை கருத்துக்களை கேட்க அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.


பழநி முருகன் கோயிலுக்கு செல்ல பக்தர்கள் படிப்பாதை, யானை பாதை, ரோப்கார், வின்ச் சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர். மாதம் தோறும் சனி, ஞாயிறு, விடுமுறை நாட்கள், கார்த்திகை, சஷ்டி, முகூர்த்தம் போன்ற நாட்களில் ஏராளமான பக்தர்கள் வருகை புரிகின்றனர். பழநி கோயிலுக்கு செல்ல தற்போது மூன்று வின்ச்கள் செயல்பட்டு வருகின்றன. முருகன் கோயிலுக்கு வின்சில் செல்ல 15 நிமிடங்கள் பயண நேரம் ஆகும். அவற்றில் பக்தர்கள் பயணம் செய்ய குறைந்தபட்சம் இரண்டு முதல் மூன்று மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இந்நிலையில் கீழ் வின்சிலிருந்து மேலே செல்ல ரூ.10, ரூ.50, ரூ.60 என கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. மேலும் மேலே இருந்து வின்சில் கீழே வர ரூ.10, ரூ.25, ரூ.30 என கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. இதற்கென தனித்தனி வின்ச் வரிசைகளில் பக்தர்கள் வருகை புரிகின்றனர். இதில் சில நபர்களாக அனுமதிக்கும் சூழல் ஏற்படுகிறது. இதனால் அங்கு பக்தர்களிடம் சச்சரவு ஏற்படுகிறது. இதேபோல் ரோப் காரில் ரூ.15, ரூ. 50 டிக்கெட்டுகளை ஒரே கட்டணமாக ரூ. 50 என மாற்றப்பட்டு ஒரே வரிசையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அதேபோல் வின்ச்சில் ரூ. 50 ஒரே கட்டணம் நிர்ணயப்பட்டு பக்தர்களை அனுமதிக்க கோயில் நிர்வாகம் உத்தேசித்துள்ளது.


பக்தர்களை வின்ச் மூலம் முருகன் கோயிலுக்கு ஒரே கட்டண சீட்டு ரூ.50 அதுவும் அமல்படுத்துவது குறித்து ஆலோசனைகள், ஆட்சேபனைகள் இருப்பின் இணை கமிஷனர், செயல் அலுவலர், அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில், பழநி என்ற முகவரிக்கு தபால் மூலமோ நேரிலோ நவ., 5 தேதிக்குள் கிடைக்கும் வகையில் அனுமதிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது, என கோயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் நவ.5., க்கு மேல் பின்னர் அனுப்பப்படும் ஆலோசனைகள், ஆட்சேபனைகளை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து, பழநி ஞாணதண்டாயுதபாணி சுவாமி பக்தர் பேரவை, நிறுவனர் செந்தில், "பழநி மலை கோயிலுக்கு நடந்து செல்ல இயலாதவர்கள் வின்ச், ரோப் கார் சேவையை பயன்படுத்தி வருகின்றனர் பெரும்பாலும் நடுத்தர வர்க்கத்தினர், வின்ச் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இதில் கட்டண மாற்றம் செய்ய ஆலோசனை மற்றும் ஆட்சேபனை கருத்து கேட்டு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் ரூ.60 டிக்கெட் மதிப்பீட்டில் செல்ல அதிநவீன வின்ச் இயக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த வின்ச்ல் எந்த வசதிகளும் இல்லாமல் 72 பேர் பயணிக்க கூடிய வின்ச்ல் தற்போது 30 பேர் மட்டுமே பயணித்து வருகின்றனர். தற்போது கட்டணம் மாற்றம் என்ற பெயரில் ரூ. 50 கட்டணம் நிர்ணயிக்கும் சூழலில் ஐந்து பேர் கொண்ட குடும்பத்தினர் வந்து செல்ல 500 ரூபாய் செலவு ஏற்படும் இது தவிர அலைபேசி வைக்க, பஞ்சாமிர்தம் வாங்க என அதிக செலவு ஏற்படுகிறது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் எந்த கட்டணம் இல்லாமல் தரிசனம் செய்ய வேண்டும். எனினும் ரூ.50 அறிவிக்கப்பட்ட வின்ச் கட்டணத்தை, ரூ. 20 ஆக மாற்றி அறிவிப்பு வெளியிட வேண்டும். மேலும் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும். பழநி கோயிலை திருப்பதியைப் போல மாற்ற முயலும் அரசு, திருப்பதியில் உள்ளது போல் அனைத்தும் இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !