உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீ சத்ய சாய் 100; தெய்வீக அன்பின் நூற்றாண்டு விழா.. களைகட்டியது புட்டபர்த்தி

ஸ்ரீ சத்ய சாய் 100; தெய்வீக அன்பின் நூற்றாண்டு விழா.. களைகட்டியது புட்டபர்த்தி

ஆந்திரப் பிரதேசத்தின் ஆன்மிகத் தலைநகராக திகழும் புட்டபர்த்தி, இன்றைய தினம் ஒரு புதிய ஒளியில் நனைகிறது. காரணம் — பகவான் ஸ்ரீ சத்யசாய்பாபாவின் பிறந்த நூற்றாண்டு விழா!  தனது அன்பு, சேவை, மனிதநேயம், அமைதி ஆகியவற்றால் உலகம் முழுவதையும் ஒன்றிணைத்தவர்.


அவரின் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு, புட்டபர்த்தி ஆன்மிகத் திருவிழாவின் உச்சியில் திகழ்கிறது. அவரது பாதம் பட்ட புட்டபர்த்தி ஒரு பெரும் விழாவினைக் காணப்போகும் நிலையில் களைகட்டி வருகிறது. அது மனித நேயம், தன்னலமற்ற சேவை, சத்தியம், தர்மம், சாந்தி, அன்பு, அஹிம்சை ஆகியவற்றின் உருவகமாக திகழும் பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் நுாற்றாண்டு விழாவாகும். உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பக்தர்களின் இதயத்தில் நிலைபெற்ற பகவான் ஸ்ரீ சத்யசாய்பாபா அவதரித்த நாள் 1926 நவம்பர் 23ஆம் தேதி. அவதரித்த இடம் புட்டபர்த்தியாகும்.


ஒருகாலத்தில் ஒரு சாதாரண கிராமமாக இருந்த புட்டபர்த்தி எனும் சிற்றூரை தனது மனித குல சேவையால் உலக வரைபடத்தில் இடம் பெறச் செய்திட்டவர் பாபா. இன்று உலகமெங்கும் இருந்து பக்தர்கள் வந்து வழிபடும் பிரசாந்தி நிலையம் ஒழுக்கம், அமைதி, தியானம் உள்ளீட்ட நற்செயல்களின் தாயகமாக விளங்குகிறது. நூற்றாண்டு விழாவை முன்னிட்டு புட்டபர்த்தி முழுவதும் எங்கு பார்த்தாலும்  வண்ணமயமான அலங்காரங்கள், வேதமந்திர ஒலிகள், பக்திச் சங்கீதம், கலாச்சார நிகழ்ச்சிகள் என ஆன்மிக அலைகள் பரவி வருகின்றன.பக்தர்கள் “சாய்ராம்” எனும் மந்திர ஒலியுடன் புட்டபர்த்தியை ஆன்மிகக் கடலாக மாற்றியுள்ளனர். ஏற்கனவே நுாற்றாண்டு விழா கொண்டாட்டம் துவங்கிவிட்ட நிலையில் நாளுக்கு நாள் கொண்டாட்டத்தின் தன்மை கூடிக்கொண்டே வருகிறது.மதம், மொழி, இனம்,தேசம் கடந்து பக்தர்கள் விழா சிறக்க உழைத்து வருகின்றனர்.


சத்யசாய்பாபாவின் அன்பு மற்றும் சேவைத் தத்துவம் எல்லைகளைத் தாண்டியது. ஆஸ்திரேலியா முதல் ஆப்ரிக்கா வரை, அமெரிக்கா முதல் இலங்கை வரை, 150க்கும் மேற்பட்ட நாடுகளில் சாய்சங்கங்கள் இயங்கி வருகின்றன. இந்நூற்றாண்டு விழாவிற்காக பலர் புட்டபர்த்திக்கு வருகை தரவிருக்கின்றனர். இலவச மருத்துவ முகாம்கள், இரத்த தான முகாம்கள், அன்னதானம், கல்வி உதவித்தொகை வழங்குதல் போன்ற சேவைகள் உலகம் முழுவதும் நடைபெறுகின்றன. இது சாய்பாபாவின் “அன்பே சேவை, சேவையே வழிபாடு” என்ற உபதேசத்தை நினைவூட்டிக் கொண்டே இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !