உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவில் ராஜகோபுரம் புதுப்பிக்கும் பணி தீவிரம்

செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவில் ராஜகோபுரம் புதுப்பிக்கும் பணி தீவிரம்

செஞ்சி; பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் செஞ்சிக்கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் ராஜ கோபுரம் புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது.


விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் கி.பி., 13ம் நுõற்றாண்டை சேர்ந்த வரலாற்று சிறப்பு மிக்க மலைக்கோட்டை உள்ளது. இந்த கோட்டையின் உள்ளே ஏராளமான கோவில்கள் உள்ளன. இதில் 7 நிலை ராஜகோபுரத்துடன் கம்பீரமாக காட்சி தருவது சந்திரகிரி மலையடிவாரத்தில் உள்ள வெங்கட்ரமணர் கோவில்.


சிறந்த கட்டடங்களையும், அழகிய சிற்ப வேலைப்பாடுகளும் நிறைந்த இந்த கோவிலை கி.பி., 1540 முதல் 1550 வரை செஞ்சியை ஆட்சி செய்த முத்தையாலு நாயக்கர் கட்டியுள்ளார். பெரிய அளவிளான விழாக்களும், பூஜைகளும் நடந்ததற்கான ஆதாரங்கள் இந்த கோவிலில் காணப்படுகின்றன. முகமதியர்களின் படை யெடுப்பின் போது கோவிலின் பெரும் பகுதி சேதமாக்கப்பட்டது. முகமதியர் ஆட்சிக்கு பின்னர் மீண்டும் இந்து மன்னர்களின் ஆட்சி ஏற்படாமல் பிரஞ்சு மற்றும் ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் செஞ்சிக்கோட்டை இருந்தது. இதனால் வெங்கட்ரமணர் கோவில் புதுப்பிக்கப்பட வில்லை. இதன் பிறகு வெங்கட்ரமணர் கோவில் இந்திய தொல் பொருள் ஆய்வுத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது. 300 ஆண்டுகளுக்கும் மேலாக புதுப்பிக்கப்படாமல் இருந்த வெங்கட்ரமணர் கோவிலில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோவிலின் கருவரை, தாயார் சன்னதி, பிரகார தெய்வங்களின் கோபுரம் மற்றும் இரண்டாம் பிரகார நுழைவு கோபுரம் புதுப்பிக்கப்பட்டன. அப்போது ராஜகோபுரம் புதுப்பிக்கப்படாமல் இருந்தது. இதனால் இதில் இருந்த சிற்பங்கள் சிதைந்து அழிந்து வந்தன. எனவே ராஜகோபுரத்தை புதுப்பிக்க வேண்டும் என பொது மக்களும், பக்தர்களும் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இது குறித்து பல முறை நமது ‘தினமலர்’ நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. தற்போது பல லட்சம் மதிப்பில் ராஜ கோபுரம் புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. தொல்லியல் துறை கட்டடங்களை புதுப்பிக்கும் ஒப்பந்ததாரர்கள் மூலம் இந்த பணிகளை இந்திய தொல்லியல் துறையினர் செய்து வருகின்றனர். நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேறி வருவதால் பொது மக்களும் பக்தர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !