தருமபுரம் ஆதீனம் மணிவிழா; சிவஞான கொலு காட்சியில் சுவாமிகள் அருளாசி
மயிலாடுதுறை; தருமபுரம் ஆதீனத்தில் கோலாகலமாக நடந்த மணிவிழாவின் போது குருமகா சன்னிதானம் சிவஞான கொலு காட்சியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.
தருமை ஆதீனம் 27வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் மணி விழாவில் ஐப்பசி புனர்பூசம் திருநட்சத்திர நாளான இன்று சொக்கநாதர் பூஜை மகா ருத்ர கலசபிஷேகம் மற்றும் குரு லிங்க சங்கம யாகசாலை பூஜை 8ம் கால பூர்ணாகுதி மற்றும் மகாதீபாரதனை நடந்தது. ஞானபுரீஸ்வரர் கோயிலில் மகா அபிஷேகம் ஆராதனைகள் நடந்தது. பின்னர் யாகத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட நீரைக் கொண்டு 27வது குருமகா சன்னிதானத்திற்கு மணிவிழா கலசாபிஷேகம் செய்து வைக்கப்பட்டது.
தொடர்ந்து ஆதீனம் முன் மண்டபத்தில் சிவஞான கொலு காட்சியில் எழுந்தருள திருப்பனந்தாள் காசி திருமடம் 22 வது அதிபர் ஸ்ரீலஸ்ரீ சபாபதி தம்பிரான் சுவாமிகள் மற்றும் தருமை ஆதீனம் தம்பிரான் சுவாமிகள் அனைவரும் புஷ்ப அர்ச்சனை செய்து குரு வழிபாடு செய்தனர். ஆதீனம் திருக்கோயில்கள், சிதம்பரம் நடராஜர் கோயில், காஞ்சி சங்கர மடம், வேலூர் சக்தி பீடம் உள்ளிட்ட பல மடங்களின் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
ஜப்பான் சிவஆதீனம் ஸ்ரீ பால கும்ப குருமுனி சுவாமிகள், பாஜக தமிழக அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன், காமராஜ், மயிலாடுதுறை எம்.எல்.ஏ. ராஜகுமார், முன்னாள் எம்எல்ஏ பவுன்ராஜ், புதுச்சேரி சபாநாயகர் செல்வம் உள்ளிட்ட பலர் ஆதீனம் 27வது குருமகா சந்நிதானத்திற்கு நேரில் வாழ்த்து தெரிவித்து ஆசி பெற்றனர்.
தொடர்ந்து சிவாச்சாரியார்கள் திருக்கடவூர் ராஜ அமிர்தகடேசன் , கணேசன், மகேஷ், சந்திரமவுலி, ஹரிகிருஷ்ணன், வைத்தீஸ்வரன்கோயில் முத்து. ஐயப்பன், ராஜமகாதேவன், திருப்பனந்தாள் கல்யாணசுந்தரம் , சென்னை முத்துகுமாரசாமி, சேமங்கலம் ஹேமநாதன் ஆகியோருக்கு சிவகாம கலாநிதி பட்டமும், ஓதுவார்கள் கொல்லாபுரம் சாமிநாதன், கொடுமுடி லோக வசந்தகுமார் ஆகியோருக்கு திருமுறை கலாநிதி விருதும், தொடர்ந்து டாக்டர்கள், இசைக்கலைஞர்கள் என மணி விழாவில் 30 பேருக்கு சிறப்பு விருதுகள் மற்றும் அனைவருக்கும் ஒரு பவுன் தங்கப் பதக்கமும் நினைவுப் பரிசும் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் வழங்கினார். இதில் ஆதீன நிர்வாகிகள், ஆதீன புலவர்கள், ஆதீனக் கல்லூரி பேராசிரியர்கள், கல்வி நிலையங்களின் செயலர் மற்றும் ஆசிரியர்கள், ஆதீன கோயில்கள் மற்றும் கிளை மடங்களின் கண்காணிப்பாளர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து மாகேஸ்வர பூஜை நடந்தது. மாலை நாற்காலி பல்லாக்கில் குருமூர்த்தங்களுக்கு சென்று வழிபாடு நடத்திய தருமபுரம் ஆதீனம் 27 வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் வீதி உலா வந்தார். அவருக்கு பக்தர்கள் ஆரத்தி எடுத்து வழிபாடு நடத்தினர்.