உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தர்மத்தின் வழியில் சென்றால் நிரந்தர மகிழ்ச்சி; சிருங்கேரி சுவாமிகள்

தர்மத்தின் வழியில் சென்றால் நிரந்தர மகிழ்ச்சி; சிருங்கேரி சுவாமிகள்

புதுடில்லி: ‘ஒருவர் நிரந்தரமான சந்தோஷத்தில் வாழ வேண்டுமெனில், தர்ம மார்க்கத்தில் இருப்பதுதான் ஒரே வழி,” என சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீட ஜகத்குரு விதுசேகர பாரதீ சன்னிதானம் விளக்கினார்.

டில்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டிருக்கும்  சுவாமிகள் இன்று மஹாவீர் பிரசாத் ஜயபூர்யாவின் அழைப்பினை ஏற்று அங்கு எழுந்தருளினார்.பாஜ எம்.பி., மற்றும் பிரசாரகர் டாக்டர் சுதான்ஷு திரிவேதி, “செயற்கை நுண்ணறிவு ஆட்சி செய்யும் யுகத்தில், மக்கள் நலமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழும் நிலையில், தர்மத்தின்  நிலைதான் என்ன” என்ற சந்தேகத்தை சுவாமியிடம் முன்வைத்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாக சுவாமி தம் அருளுரையில் விளக்கியதாவது-: ஒரு கேள்வி கேட்போம். செயற்கை நுண்ணறிவு வருவதற்கு முன்பே இவ்வுலகில் சந்தோஷமும் துக்கமும் இருந்ததா என்றால் ‘ஆம்’ என்பதே பதில். அதேபோல் இன்றும், இத்தகைய செயற்கை நுண்ணறிவு காலத்திலும் சந்தோஷமும் துக்கமும் உள்ளதா? என்றால் இதற்கும் பதில் ‘ஆம்’ என்பது தான். ஒருவர் மகிழ்ச்சியாக இருக்கவும், மற்றவர் துன்பப்படுவதற்கும் காரணம் என்ன என்ற கேள்விக்கு, இறுதியில் ஒப்புக்கொள்ள வேண்டியது, அது ஒருவரின் முந்தைய பிறவிகளில் செய்த தர்மம் அல்லது அதர்மத்தின் விளைவு என்பதே. மேலும், தர்மமும் அதர்மமும் ஒருபோதும் இடமாற்றம் பெறவில்லை. எது நேற்று தர்மமோ அதேதான் இன்றும் தர்மம், நாளையும் அதுவே தர்மமாகவே இருக்கும். இவை நிலையானவை; தர்மமில்லாத வாழ்க்கையிலும் சிலர் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள் போலத் தோன்றும். ஆனால் அது தற்காலிகம். 

ஒருவர் சிறந்த வேலை செய்து நன்றாக சம்பாதித்து, பிறகு வேலையினை இழந்தாலும் பழைய சம்பாதிப்பின் கையிருப்பு மூலம் சில வருடங்கள் பழைய வசதியோடு வாழ முடியும். ஆனால் புதிய வேலை கிடைக்காவிட்டால் கடினநிலைகள் துவங்கும். அதுபோல புண்ணியம் இருக்கும் வரை இன்பம் தொடரலாம்; ஆனால் அது முடிந்தவுடன் துன்பம் ஆரம்பமாகும். எனவே ஒருவர் நிரந்தரமான சந்தோஷத்தில் வாழ வேண்டுமெனில், தர்ம மார்க்கத்தில் இருப்பதுதான் ஒரே வழி தவிர வேறு வழியே இல்லை. இவ்வாறு சுவாமிகள் விளக்கம் அளித்தார்.

கர்நாடக சங்கத்தில் அருளுரை:இன்று மாலை சுவாமிகள் கர்நாடக சங்கத்திற்கு விஜயம் செய்து அருளுரை வழங்கும்போது, ‘நீங்கள், வேலை அல்லது பிற காரணங்களால் இங்கே குடிபெயர்ந்திருந்தாலும், எந்த நிலையிலும் தர்மத்தை விட்டுவிடக் கூடாது’ என எடுத்துரைத்தார்.

த்வாரகா விஜயம்: அதன்பின் த்வாரகா ஸ்ரீ ராமர் கோவிலுக்கு சென்ற சுவாமிகளை, பக்தர்கள் மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்றனர்.
ஸ்ரீ ராமர், காமேஸ்வரர், காமேஸ்வரி, ஹனுமன் மற்றும் பிற தெய்வங்களின் தரிசனத்தை முடித்தபின், கோவிலுக்கு அடுத்துள்ள மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடையிலிருந்து 350-க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். 1956-ல் பஜனை மண்டலியாக தொடங்கிய இந்த ஆலயத்திற்கு 2002-ல் நிலம் ஒதுக்கப்பட்ட வரலாறு குறித்து சமர்பிக்கப்பட்டது. தொடர்ந்து சுவாமிகள் பக்தர்களுக்கு அருளாசி வழங்கி பேசியதாவது: 
பகவான் யாரையும் வேறுபடுத்தி நடத்தமாட்டார்; பணக்காரர், ஏழை, பண்டிதர், பாமரர் என்பதற்கேற்ற வேறுபாடு அவரிடம் இல்லை. பகவான் ஒரு ஒளி மிகுந்த அக்னியினைப் போலானவர்; வெப்பத்தைப் பெற விரும்புபவர் அதற்கருகில் செல்வது போல, யார் சென்றாலும் தெய்வீக அனுக்ரஹம் அவர்களுக்கு கிடைக்கும். மனிதனின் முயற்சி மற்றும் தெய்வீக அருள் — இவை இரண்டும் சேரும் போது மட்டுமே எதிர்பார்த்த பலன் கிடைக்கும். 
பகவத் ஸ்மரணமில்லாமல் எந்த உலகியலான முயற்சியும் மனிதனை சம்சாரச் சுழலில் இன்னும் ஆழமாக இழுத்துச் செல்லும். பிரார்த்தனைக்கும் பூஜைக்கும் ஒரு சிறிய நேரமாவது ஒதுக்காமல் யாரும் உண்மையான முன்னேற்றத்தையும், பிறவி சுழலிலிருந்து விடுதலையையும் அடைய முடியாது. குழந்தைகளுக்கு பகவத் பக்தியை வளர்க்க வேண்டும்; இந்த பஜன் மண்டலியும் கோவிலும் அந்த அழிவில்லாத தர்மத்தின் மையமாக இருந்து, இளம் தலைமுறையை அவ்வழியில் திசைதிருப்ப வேண்டும்.இவ்வாறு சுவாமிகள் அருளுரை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !