செஞ்சி அருகே பழங்கால விஷ்ணு துர்கை, சிற்பங்கள் கண்டுபிடிப்பு
செஞ்சி; செஞ்சி அருகே பழங்கால சிற்பங்களை வரலாற்று ஆய்வாளர் கண்டு பிடித்துள்ளார்.
விழுப்புரத்தை சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன் செஞ்சி அடுத்த நங்கியானந்தல் கிராமத்தில் கள ஆய்வு செய்தார். அங்கு விஷ்ணு துர்கை மற்றும் நடுகல் சிற்பம் இருந்ததை கண்டு பிடித்துள்ளார்.
இது குறித்து வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன் கூறியதாவது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த நங்கியானந்தல் கிராமத்தை சேர்ந்த ஆசிரியர் சவுந்தரராஜன் கொடுத்த தகவலின் பேரில் நங்கியானந்தல் கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டேன். அப்போது அங்குள்ள புது ஏரிக்கு எதிரே பொன்னியம்மன் கோயில் கட்டுமான பணியில் ஈடுபட்டனர். அப்போது 2 சிற்பங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. நீளமாக உள்ள ஒரு பலகை கல்லில் தேய்து போன நிலையில் நின்ற நிலையில் விஷ்ணு துர்கை சிற்பம் உள்ளது. ஆடை அணிகலன் மற்றும் அலங்கரிக்கப்பட்ட தலைமுடியுடன், வலது கரத்தில் சக்கரமும், இடது கரத்தில் சங்கும் உள்ளன. இந்த சிலை கி.பி.12 அல்லது 13ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம் என மூத்த கல்வெட்டு ஆய்வாளர் விஜய வேணுகோபால் உறுதிப்படுத்தி உள்ளார். மற்றொரு பலகைக் கல்லில் கலைநயத்துடன் நடுகல் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. போருக்கு செல்லும் வீரனை போன்று கால்கள் முன்னும் பின்னும் உள்ளன. வீரனின் வலது கரத்தில் பெரிய கத்தியைப் போன்ற ஆயுதமும், இடது கரத்தில் நீண்ட வில்லும் காணப்படுகிறது. நேர்த்தியான மீசையும், அழகிய தலை அலங்காரமும், அணிகலன்களுடன் இடைக்கச்சையும் காணப்படுகிறது. இது போரில உயிர் நீத்த படைத்தலைவன் அல்லது போர் வீரன் நினைவாக வைக்கப்பட்டுள்ளது. இதன் காலம் கி.பி.16ஆம் நூற்றாண்டை சேர்ந்தது. நங்கியானந்தல் கிராமம் சோழர், விஜயநகர ஆட்சியின் போது சிறப்புடன் இருந்ததை சிற்பங்கள் உணர்த்துகின்றன. ஆய்வின்போது ஊராட்சிமன்ற தலைவர் வெங்கட சுப்ரமணியன், முன்னாள் தலைவர் குணசேகர் உள்ளிட்டவர் உடன் இருந்தனர். இவற்றை கிராம மக்கள் உரிய முறையில் பாதுகாக்க வேண்டும். இவ்வாறு செங்குட்டுவன் கூறினார்.