9ம் நுாற்றாண்டு மூத்த தேவி சிற்பம் உத்திரமேரூர் அருகே கண்டெடுப்பு
காஞ்சிபுரம்: உத்திரமேரூர் அருகே பெருநகரில், 9ம் நுாற்றாண்டைச் சேர்ந்த, மூத்த தேவி சிற்பத்தை வரலாற்று ஆய்வாளர்கள் நேற்று கண்டெடுத்தனர்.
உத்திரமேரூர் அடுத்த பெருநகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில், செய்யாறு அறிஞர் அண்ணா கலை அறிவியல் கல்லுாரி வரலாற்று துறை விரிவுரையாளர் மதுரைவீரன், முதுகலை வரலாற்று மாணவர்கள் ஜீவா தேவக்குமார் உள்ளிட்டோர் அடங்கிய வரலாற்று ஆய்வாளர்கள், நேற்று கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 9ம் நுாற்றாண்டைச் சேர்ந்த மூத்த தேவி சிற்பத்தை கண்டெடுத்துள்ளனர். இதுகுறித்து, வரலாற்றுத்துறை விரிவுரையாளர் மதுரை வீரன் கூறியதாவது: பெருநகர் அருகே உள்ள சேத்துப்பட்டு பகுதியில், கள ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, அப்பகுதி மக்களால் ‘அருநெறி அம்மன்’ என்ற பெயரில் வழிபட்டு வரும் புடைப்பு சிற்பத்தை ஆய்வு செய்தோம்.
இந்த சிற்பமானது, 3.5 அடி உயரம், 2 அடி அகலம் கொண்ட ‘தவ்வை’ என அழைக்கப்படும் மூத்த தேவியின் சிற்பம். சிலையில் மாந்தன், மாந்தியின் உருவங்கள் உள்ளன. அழகிய நேர்த்தியுடன் வடிவமைக்கப்பட்ட இச்சிற்பம், பல்லவர்கள் காலத்தில் சிறப்புடன் வழிபட்டு வந்த ஒரு தெய்வம். இச்சிலை, வளமையின் அடையாளமாக, அப்பகுதி மக்களால் வழிபாட்டில் இருந்து வருகிறது. புராணங்களில் குறிப்பிடப்படும் -பாற்கடலை கடைந்தபோது முதலில் வந்த தெய்வம் என்பதால், இதை மூத்த தேவி என அழைத்தனர். காலப்போக்கில் இச்சொல்லானது மருவி மூதேவி என, அழைக்கப்படுகிறது. பல்லவர்கள் முதல் சோழர்கள் ஆட்சி காலம் வரை வழிபாட்டில் இருந்த இத்தெய்வம், காலப் போக்கில் அழிவு நிலைக்கு சென்றது. இந்த சிற்பம் 9ம் நுாற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என, காஞ்சிபுரம் அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் உமாசங்கர் தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.