சபரிமலைக்கு காட்டுப்பாதைகளில் வரும் பக்தர்களுக்கு நேர கட்டுப்பாடு
சபரிமலை; பக்தர்களின் வசதிக்காக பெருவழிப்பாதை மற்றும் புல்மேடு - சத்திரம் பாதையில் பக்தர்கள் செல்வதற்கான நேர விபரங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எருமேலியிலிருந்து அழுதை கரிமலை வழியாக பம்பை வரும் பெருவழி பாதை புராதனமானது. மகர விளக்கு காலத்தில் இந்த பாதையில் அதிக பக்தர்கள் வந்தாலும் தற்போது சீசன் தொடக்கம் முதலே பக்தர்கள் வரத் தொடங்கியுள்ளனர். இதுபோல சத்திரம் - புல் மேடு வழியாக சன்னிதானம் வருவது மற்றொரு பாதையாகும். இந்த இரண்டு பாதைகளிலும் பக்தர்கள் காட்டுக்குள் சிக்கிக் கொள்ளாமல் இருக்க கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி பெருவழிப்பாதையில் கோயிக்காவிலிருந்து காளகட்டிக்கு பக்தர்கள் காலை 6.00 முதல் மாலை 5.00 வரை செல்லலாம். அழுதையில் இருந்து காலை 7.00 முதல் மதியம் 2:30 வரை பக்தர்கள் செல்லலாம். அதுபோல புல் மேடு பாதையில் சத்திரத்தில் காலை 7:00 மணி முதல் பகல் ஒரு மணி வரை மட்டும் பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். அதன் பின்னர் வரும் பக்தர்கள் அடுத்த நாள் காலையில்தான் அனுப்பப்படுவார்கள். அது போல இந்த பாதையில் திரும்பிச் செல்லும் பக்தர்கள் காலை 8 மணி முதல் 11 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.