அயோத்தி உரையில் தமிழகத்தின் உத்திரமேரூரை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி
அயோத்தி: உத்தர பிரதேசத்தில், பிரமாண்ட ராமர் கோவிலில் காவி கொடி ஏற்றிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா ஒரு வரலாற்று சிறப்புமிக்க கலாசார தருணத்தை கண்டுள்ளது. இது வெறும் கொடி அல்ல, கலாசார அடையாளம். இதன் மூலம், 500 ஆண்டு கால கனவு நிஜமாகி உள்ளது, என, குறிப்பிட்டார்.
இந்நிலையில், ராமர் கோவிலின் கட்டுமானப் பணிகள் முழுமை அடைந்ததை அடுத்து, கோவில் கோபுரத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், பிரதமர் மோடி, மாநில கவர்னர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் ஆகியோர் இணைந்து, 161 அடி உயர கோவில் கோபுரத்தில் காவி கொடியை ஏற்றினர். தொடர்ந்து, பால ராமருக்கு சிறப்பு பூஜைகள் செய்து இருவரும் வழிபட்டனர்.
கோவில் வளாகத்தில் திரண்டிருந்த பக்தர்களிடையே பிரதமர் மோடி பேசியதாவது: நாட்டின் புதுப்பிக்கப்பட்ட கலாசார உணர்வின் வாழும் அடையாளமாக அயோத்தி மாறி உள்ளது. இன்று ஒட்டுமொத்த நாடும், உலகமும் ராம மயமாக உள்ளது. ஒவ்வொரு ராம பக்தரின் இதயத்திலும் முழுமையான திருப்தி உள்ளது. எல்லையற்ற நன்றியுணர்வும், அளவிட முடியாத ஆன்மிக ஆனந்தமும் உள்ளது. அயோத்தியில் இன்று காவி கொடி ஏற்றியது வரலாற்று சிறப்புமிக்கது. இது வெறும் கொடி அல்ல, நாட்டின் கலாசார அடையாளம். நாட்டின் கலாசார விழிப்புக்கு இன்றைய நாள் சாட்சியாக உள்ளது. இதன் மூலம் பல நுாற்றாண்டுகளின் வலி முடிவுக்கு வருகிறது; 500 ஆண்டு கால கனவு நிறைவேறி உள்ளது. வாய்மையே வெல்லும் என்பதை இந்த ராமர் கொடி காட்டுகிறது. இந்த காவி கொடி ஒற்றுமையையும், தெய்வீகத்தையும் விளக்குகிறது. இது, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு ராமரின் கொள்கைகளை பறைசாற்றும். அயோத்தி அதன் வரலாற்றில் மற்றொரு சகாப்த நிகழ்வை கண்டுள்ளது. ஒவ்வொரு குடிமகனும் ராமர் கோவிலுக்கு வரும் போது, சப்த மண்டபத்திற்கு செல்ல வேண்டும். அயோத்தி தற்போது, உலகிற்கு ஒரு முன்மாதிரி நகரமாக மாறி வருகிறது.நாம் பாகுபாடுகளால் அல்ல, உணர்வுகளால் ராமருடன் இணைகிறோம்.
பிரதமர் மோடி மேலும் பேசியதாவது: தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உத்திரமேரூர் என்ற இடமுள்ளது. அங்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு கல்வெட்டு உள்ளது. அந்த காலத்தில், நிர்வாக அமைப்பு எவ்வாறு ஜனநாயக ரீதியாக செயல்பட்டது; ‘குடவோலை’ முறை மூலம் மக்கள் எவ்வாறு அரசை தேர்ந்தெடுத்தனர் என்பதை இது விளக்குகிறது. நம் நாட்டில் பல நுாற்றாண்டுகளுக்கு முன்பே ஜனநாயகம் எவ்வாறு தழைத்தோங்கியது என்பது இதன் மூலம் நிரூபணமாகிறது. இவ்வாறு அவர் பேசினார்.