மந்திரங்களால் தீமை விலகும் வேல் வழிபாட்டில் அறிவுறுத்தல்!
பல்லடம்; மந்திரங்கள், நாமாவளிகளால் வீட்டில் உள்ள தீய சக்திகள் விலகும் என, பல்லடத்தில் நடந்த வேல் வழிபாட்டின்போது அறிவுறுத்தப்பட்டது.
திருப்பூர் மேற்கு மாவட்ட ஹிந்து முன்னணி சார்பில், மங்கள வேல் வழிபாடு, பல்லடம் என்.ஜி.ஆர்., ரோடு, பொன்காளியம்மன் கோவில் முன்பாக நடந்தது. மாவட்ட செயலாளர். சர்வேஸ்வரன் தலைமை வகித்தார். மாநில நிர்வாக குழு உறுப்பினர் செந்தில், மாவட்டச் செயலாளர் ரஞ்சித், நகரப் பொறுப்பாளர்கள் அங்கு ராஜ், விஜய், சுந்தர வடிவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஹிந்து அன்னையர் முன்னணி மாவட்டச் செயலாளர் சித்ரா பேசுகையில், கோவில்களுக்கு சென்றால், தூரத்தில் இருந்து இறைவனை தரிசிக்கலாமே தவிர நம்மால் அபிஷேகம் செய்ய முடியாது. ஆனால், இறைவனையே நம் கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்தி, நம் கைகளாலேயே அபிஷேகம் செய்யும் பாக்கியம் மங்கள வேல் வழிபாடு மூலம் நிறைவேறி உள்ளது. மந்திரங்களையும், நாமாவளிகளையும் வீடுகளில் சொல்லச் சொல்ல, அங்குள்ள தீய சக்திகள் விலகும். தெய்வ கடாட்சம் பெருகி, கடன் தொல்லை நீங்கி, சுபிட்சம் ஏற்படும். பத்து பேர் இணைந்து திருவிளக்கு பூஜை செய்வது என்பது, கோவில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கு சமமானது என, நம் முன்னோர்கள் கூறுகின்றனர். நமது குழந்தைகளின் கலாச்சாரம், பண்பாடும் மிகவும் சீரழிந்து வருகிறது. எனவேதான், ஹிந்து முன்னணி சார்பில் பண்பாட்டு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்த பண்பாட்டு வகுப்பின் வாயிலாக, விளையாட்டு, யோகா, ஆன்மிகம் உள்ளிட்டவை கற்பித்து தரப்படுகின்றன. இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக, ரத்தில் எடுத்து வரப்பட்ட மக்கள வேலுக்கு, பக்தர்கள் அனைவரும் அபிஷேகம் செய்து வழிபட்டனர். உலக நலன், தொழில் வளம் மற்றும் குடும்ப நலன் செழிக்க வேண்டி பிரார்த்தனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நிர்வாகிகள் விஜயன், சங்கர், செல்லதுரை, பிரகாஷ் மற்றும் ஹிந்து அன்னையர் முன்னணி நிர்வாகிகள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.