குட்டையூர் மாதேஸ்வரன் மலை மீது ஏற்றப்பட்டது கார்த்திகை தீபம்
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே குட்டையூரில் மாதேஸ்வரன் மலை உள்ளது. இந்த மலை மீது,பழமை வாய்ந்த மாதேஸ்வரன் கோவில் உள்ளது.
இங்கு ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீப விழா, விமர்சையாக நடைபெறும். நேற்று கார்த்திகை தீப விழாவை முன்னிட்டு, கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அதைத் தொடர்ந்து பரணி தீபம் ஏற்றப்பட்டது. பின்பு கோவில் அருகே மலை மீது, 150 லிட்டர் கொள்ளளவு கொண்ட, பித்தளை கொப்பரை அமைத்தனர். அதில் நெய்யை ஊற்றினர். பின்பு 150 மீட்டர் நீளமுள்ள காடா துணியை திரியாக்கி நெய்யில் நனைத்தனர். பின்பு கோபுர வடிவில் அமைத்திருந்த திரிமீது நெய்யை ஊற்றி, அதன் மீது கற்பூர கட்டிகளை அடுக்கி வைத்தனர். சரியாக, 6:00 மணிக்கு கோவில் அர்ச்சகர் சிறப்பு பூஜை செய்து, கொப்பரையில் கார்த்திகை மகா தீபத்தை ஏற்றினார். இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, மாதேஸ்வரன் சுவாமியை வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர், அறங்காவலர்கள் செய்திருந்தனர்.