மக்களின் கடைசி நம்பிக்கை நீதிமன்றம்; அதனையும் மதிக்காத தி.மு.க., அரசு: திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றாததால் பக்தர்கள் கொதிப்பு
மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற நேற்றுமுன்தினம் உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டதை, தி.மு.க., அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்து செயல்படுத்த மறுத்ததற்கு பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
நேற்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் மீண்டும் உத்தரவிட்ட நிலையில், மக்களின் கடைசி நம்பிக்கை நீதிமன்றம்தான். அது நேற்று மீண்டும் உத்தரவிட்டும் தீபம் ஏற்ற அரசு அனுமதிக்காதது ஏன் என ஹிந்து பக்தர்கள் கொந்தளித்தனர். தி.மு.க., அரசு இனியாவது உணரவேண்டும்: ஆதிசேஷன், மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில் தீபம் ஏற்றுவார்கள் என 1996 முதலே நான் வந்து கொண்டிருக்கிறேன். தீபம் ஏற்றுவது தொடர்பாக உயர்நீதிமன்றம் மதுரை கிளை சிறப்பான தீர்ப்பு வழங்கியது எங்களை போன்ற முருக பக்தர்களுக்கு கொண்டாட்டமாக இருந்தது. ஆனால் தி.மு.க., அரசு தீர்ப்பை மதிக்காமல் அதை புறக்கணித்தது கண்டிக்கத்தக்கது. வருத்தமானது. திருப்பரங்குன்றத்தில் முருக பக்தர்களை வரவிடாமல் 144 தடை உத்தரவு போட்டதும் ஏற்கத்தக்க அல்ல. கோயிலுக்கு வரும் பக்தர்களையும், முருக பக்தர்களையும் அவமதிக்கும் செயல். நீதிபதி சுவாமிநாதனின் தீர்ப்பை இருநீதிபதிகள் கொண்ட அமர்வு உறுதிசெய்துள்ளது. இனியாவது அரசு மக்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும்.
ஹிந்து - முஸ்லிம் பிரச்னை ஏற்படாது
வைகை ராஜன், மதுரை: மலை உச்சி தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது ஒரு காலகட்டத்தோடு நின்று போனது. அடுத்தடுத்து தமிழகத்தை ஆண்ட தி.மு.க.,வினர் தீபம் ஏற்றுவது குறித்து கேலியும், கிண்டலும் செய்ததோடு அதை தீண்டதகாதது போல் பேசி அதை செயல்படுத்தவிடாமல் தடுத்துவிட்டனர். கோயில் நிர்வாகமும் அதை கண்டுகொள்ளவில்லை. திருப்பரங்குன்றம் முருகன் மலையில் தர்கா வழிபாடு தடையின்றி நடக்கிறது. மலை உச்சியில் தீபம் ஏற்றுவதால் யாருக்கும் எந்த பிரச்னையும் இல்லை. இதை தர்கா நிர்வாகமும் ஏற்றுக்கொள்கிறது. தீர்க்க முடியாத பிரச்னைகளுக்கு தீர்வு காணதான் நீதிமன்றத்திற்கு வருகிறார்கள். பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் தீர்ப்பு அளித்தால் அதை ஏற்க மறுக்கிறார்கள். தேவை எனில் நீதிபதியை துாக்கி பிடிப்பதும், தேவை இல்லை என்றால் விமர்சிப்பதும் ஆரோக்கியமானது அல்ல. தீபம் ஏற்றினால் ஹிந்து - முஸ்லிம் பிரச்னை ஏதும் ஏற்படாது.
எங்களது உரிமை உறுதிசெய்யப்பட்டுள்ளது
போதும் பொண்ணு, திருப்பரங்குன்றம்: தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது எங்களது உரிமை என நீதிமன்றம் நிலைநாட்டியுள்ளது. இந்த உரிமையை இனி விட்டுக் கொடுக்க மாட்டோம். நீதிமன்றம் உத்தரவிட்டும் எதற்காக தீபம் ஏற்ற தடை விதிக்கின்றனர். உச்சியில் தீபம் ஏற்றுவதற்காக எவ்வளவு போராட்டங்களை கடந்து வந்துள்ளார்கள். மோட்ச தீபம் ஏற்றும் இடத்தில் கார்த்திகை தீபம் ஏற்றுவது எங்களுக்கு ஏற்புடையது அல்ல. நீதிமன்ற உத்தரவுப்படி தீபத்துாணில் தீபம் ஏற்றினால், அந்த தெய்வீகமான ஜோதியை காண ஆவலாக இருக்கிறோம்.
மக்களின் கடைசி நம்பிக்கை நீதிமன்றம்
தினகரன், மதுரை: திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான வழக்கில் அறநிலையத்துறைக்கு சாதகமாகதான் தீர்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால் அதை எதிர்த்து ஏன் அறநிலையத்துறை மேல்முறையீடு செய்தது எனத்தெரியவில்லை. பெயரிலேயே ஹிந்துவை வைத்திருக்கும் அறநிலையத்துறை ஹிந்துக்களுக்கு எதிராக செயல்படலாமா. நீதிமன்ற தீர்ப்பிற்கு தலை வணங்கியிருக்க வேண்டாமா. மக்களின் கடைசி நம்பிக்கை நீதிமன்றம் என்பதை திருப்பரங்குன்றம் விவகாரம் நிரூபித்துள்ளது. ஆனால் அந்த தீர்ப்பையே தி.மு.க., அரசு அமல்படுத்தாதது ஏன்.
உதாசீனப்படுத்துவதா
அருண்ராஜ், திருப்பரங்குன்றம்: தீபத்துாணில் கார்த்திகை தீபம் 60 ஆண்டுகளுக்கு முன்பாக ஏற்றப்பட்டுள்ளது. அங்கு தீபம் ஏற்ற கோயில் நிர்வாகமும் அறநிலையத்துறையும் முழு ஆதரவு கொடுத்திருக்க வேண்டும். யாராக இருந்தாலும் நீதிமன்ற உத்தரவை கட்டாயம் மதிக்க வேண்டும். அமல்படுத்த வேண்டும். ஆனால் நீதிமன்ற உத்தரவை உதாசீனப்படுத்துவது எந்த வகையில் நியாயம். தீபம் ஏற்றுவது ஆன்மிக ரீதியாக நேர்மறையான சக்தியை கொடுக்கும். தீபம் ஏற்றுவது தமிழர்களின் கலாசாரம் பண்பாடு. ஜோதி வடிவில் இறைவனை காண முடியும். நீதிமன்ற உத்தரவை மதித்து திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள தீபத்துாணில் தீபம் ஏற்ற வேண்டும்.