மதுராந்தகம் ராமர் கோவில் தேருக்கு தகர கொட்டகை அமைப்பு
மதுராந்தகம்: மதுராந்தகம் ஏரிகாத்த கோதண்ட ராமர் கோவில் தேருக்கு, தகர கொட்டகை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மதுராந்தகத்தில், புகழ்பெற்ற வைணவ திருத்தலங்களில் ஒன்றான, ஏரி காத்த ராமர் என அழைக்கப்படும், கோதண்டராமர் திருக்கோவில் உள்ளது. இத்திருக்கோவிலில் தேர்த் திருவிழா, மிக விமரிசையாக நடைபெற்று வந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, கோவில் கும்பாபிஷேக பணி நடைபெற்று வந்ததால், தேரோட்டம் நடைபெறாமல் இருந்தது.
பின், கடந்த சில மாதங்களுக்கு முன், கோவில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது. இந்நிலையில், உபயதாரர்கள் நிதியின் வாயிலாக, 75 லட்சம் ரூபாய் மதிப்பில் கோவில் தேரை சீரமைக்கும் பணிகள் நடந்தன. தற்போது தேரின் அடி பாகத்தில், சிறிய அளவிலான சிற்ப வேலைப்பாடு கொண்ட மரச்சிற்பங்கள், மழையில் நனைந்து வீணாகி வருகின்றன. மேலும், திறந்தவெளியில் தேர் உள்ளது.
எனவே, தேரைச் சுற்றி தென்னங்கீற்றால் கொட்டகை அமைக்க வேண்டுமென, நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, தேர் மழையில் நனையாதபடி, பாலித்தீன் தார்ப்பாய்கள் கொண்டு, முழுதுமாக மூடப்பட்டன. தற்போது, ‘டிட்வா’ புயல் காரணமாக, பாலித்தீன் தார்ப்பாய்கள் கிழிந்து சேதமாகின. இதனால் நிரந்தர தீர்வாக, உபயதாரர்கள் நிதியின் வாயிலாக தகர ‘ஷீட்’டுகளால் தேரை முழுதும் பாதுகாக்கும் வகையில், கொட்டகை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.