பூலோகநாதர் கோவிலில் அம்மன் ஐம்பொன் சிலை கண்டெடுப்பு
தஞ்சாவூர்,- தஞ்சாவூர் அருகே, கீழகோவில்பத்து கிராமத்தில், உள்ள பூலோகநாதர் கோவில், ஒரு அடி உயரமுள்ள அம்மன் ஐம்பொன் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், கீழகோவில்பத்து கிராமத்தில், சுமார் நுாறு ஆண்டுகள் பழமையான பூலோநாயகி சமேத பூலோகநாதர் கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இக்கோவிலில், கடந்த சில மாதங்களுக்கு முன் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிலையில், கோவில் வளாகத்தின் வெளிப்புற பிரகாரத்தில், தோட்டம் அமைக்க முயற்சியில், வாழைக்கன்று வைக்க, கோவில் பணியாளர்கள் நேற்று மூன்று அடியில் குழி தோண்டப்பட்டது. அப்போது, குழியில் சிலை ஒன்று இருப்பதை கண்டறிந்து, எடுத்தனர். இது குறித்து பாபநாசம் தாசில்தார் பழனிவேலுக்கும், அறநிலையத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் அளிக்கப்பட்டன. சம்பவ இடத்திற்கு வந்த தாசில்தார் பழனிவேலுவிடம் சிலை ஒப்படைக்கப்பட்டது. சிலையை ஆய்வு செய்ததில், சுமார் நுாறு ஆண்டுகள் பழமையான, ஒரு அடி உயரமுள்ள அம்மன் ஐம்பொன் சிலை என்பது கண்டறியப்பட்டது.