கொடை குறிஞ்சியாண்டவர் கோயிலில் நாள்தோறும் அன்னதான திட்டம்
கொடைக்கானல்; தமிழ் கடவுளான முருகன் ஆன்மீகத்தை மட்டுமே விரும்புபவர் அவரிடம் பிரிவினை மற்றும் வகுப்புவாகத்திற்கு இடமில்லை என இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலின் உபகோயிலான குறிஞ்சியாண்டவர் கோயிலில் நாள்தோறும் அன்னதானத் திட்டத்தை நேற்று அமைச்சர் சேகர்பாபு துவக்கி வைத்தார்.தொடர்ந்து அவர் பேசுகையில்: தி.மு.க., ஆட்சியில் இதுவரை 3927 கோயில்களுக்கு குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது. நான்காயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் 33 கிலோ தங்கத்திலான திருத்தேர் உபயமாக வழங்கப்பட்டுள்ளது. பழநி கோயிலில் ரூ. 1980 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது. இதுவரை இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் 8 ஆயிரத்து 23 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதன் மதிப்பு ரூ. 2030 கோடி மதிப்பாகும்.திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், பழநி உள்ளிட்ட 4 படை வீடுகளில் குடமுழுக்கு விழா நடத்தப்பட்டுள்ளது. கார்த்திகை மாதத்தில் தீபத் திருவிழாவில் 66 கோயில்களில் தீப வழிபாடு நடந்துள்ளது. இதில் ஒரு கோடி பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்துள்ளனர்.பழநி, ஸ்ரீரங்கம் கோயில் உட்பட 13 கோயில்களில் நாள்தோறும் அன்னதானத் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. தற்போது 14வது கோயிலாக கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோயிலில் நாள்தோறும் அன்னதானத் திட்டம் துவங்கப்பட்டுள்ளது.இதற்கு ஆண்டுக்கு ஒரு கோடி செலவாகும். இதன் மூலம் 2 லட்சம் பக்தர்கள் பயன்பெறுவர். பிள்ளையார்பட்டி கோயிலில் முழு நேர அன்னதானத் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது. 3 மாதங்களுக்கு ஒரு முறை அன்னதானம் நடக்கும் கோயில்களில் முழு பரிசோதனை செய்து இந்து சமய நிலைத்துறை ஆணையாளர்களிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, பரிசீலித்து குறைகள் நிவர்த்தி செய்து தரமான உணவுகள் அனைத்துத் தரப்பினர்க்கும் வழங்கப்படும். மேலும் பழநி முருகன் கோயிலில் உப கோயில்களான 50 கோயில்களில் 12 ஆண்டுக்கு ஒரு முறை குடமுழுக்கு நடத்தப்பட உள்ளது.பழநி கோயிலில் ரோப் கார் இலவச திட்டம், கோபுரம் ஒளியூட்டுதல் குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது.தமிழக முதல்வர் தலைமையில் அனைத்துலக வள்ளலார் மாநாடு விரைவில் நடக்க உள்ளது. மருதமலை முருகன் கோயிலில் 184 அடி உயர முருகன் சிலையும், திண்டலில் 170 அடி உயர சிலையும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
முருகனைப் பொருத்தமட்டில் ஆன்மீக கடவுள் அவரிடம் பிரிவினைவாதம், வகுப்புவாதத்தை இடமில்லை.திருப்பரங்குன்றம் முருகன் கோயில் மலையில் தீபம் ஏற்றும் பிரச்சனையை தமிழக முதல்வர் சிறப்பாக கையாண்டதால் மதுரை மக்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது என்றார். இந்து சமய அறநிலைத்துறை செயலாளர் மணிவாசகம், ஆணையாளர் சீனிவாசகம்,பழநி கோயில் இணை ஆணையர் மாரிமுத்து, அறங்காவல் குழு தலைவர் சுப்பிரமணிய உள்ளிட்டோர்பங்கேற்றனர்.முன்னதாக பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயிலில் நடக்கும் ராஜகோபுர பணிகள் குறித்து ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.