உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 19 ஆண்டுகளுக்கு பின் பக்தி பரவசத்தில் 2 லட்சம் பக்தர்கள் பங்கேற்பு

19 ஆண்டுகளுக்கு பின் பக்தி பரவசத்தில் 2 லட்சம் பக்தர்கள் பங்கேற்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பர நாதர் கோவில் கும்பாபிஷேகம் 19 ஆண்டுகளுக்குப் பின் நேற்று கோலாகலமாக நடந்தது. பனி பொழிவிலும், 2 லட்சம் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்றனர்.


காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், 2006ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகம் முடிந்து, 19 ஆண்டுகள் கடந்த நிலையில், அரசு நிதி, ஆணையர் பொதுநல நிதி, திருக்கோவில் நிதி, உபயதாரர் நிதி என, மொத்தம் 29 கோடி ரூபாய் செலவில் திருப்பணி நடந்து முடிந்த நிலையில், டிச.,8ல் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என, ஹிந்து சமய அறநிலையத்துறை அறிவித்தது. அதன்படி, கோலாகலமாக நேற்று காலை 6:10 மணிக்கு கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.


இதைத் தொடர்ந்து, பிற்பகல் 12:00 மணிக்கு மஹா அபிஷேகமும், மாலை 8:00 மணிக்கு திருக்கல்யாண உத்சவமும், பஞ்சமூர்த்திகள் வீதியுலாவும் நடந்தது. கும்பாபிஷேக பாதுகாப்பு பணியில், மாவட்ட எஸ்.பி.,சண்முகம் தலைமையில், 12 டி.எஸ்.பி.,க்களும், 25 காவல் ஆய்வாளர்கள் மற்றும் 850 போலீசார் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் நகர்ப்பகுதி மட்டுமல்லாமல், வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்து, 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று, சுவாமியை வழிபட்டனர். பக்தர்களின் பாதுகாப்புக்காக 108 ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் தயார் நிலையில் இருந்தது. நடமாடும் மருத்துவமனை வாகனத்தில் மருத்துவர்கள், மருந்து மாத்திரைகளுடன் தயார் நிலையில் இருந்தனர். வணிக நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகள், சங்கங்கள் சார்பில், பக்தர்களுக்கு பல்வேறு இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்களின் வசதிக்காக கோவில் வளாகத்திலும், சுற்றியுள்ள பகுதிகளிலும், மொபைல் டாய்லெட் வசதி ஏற்படுத்தப்பட்டு இருந்தன. கோவில் நிர்வாகம் சார்பில், பக்தர்களுக்காக, 50,000 வாட்டர் பாட்டில், பிஸ்கெட் பாக்கெட் வழங்கப்பட்டன. கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாட்டை கோவில் அறங்காவலர் வேல்மோகன், செயல் அலுவலர் முத்துலட்சுமி, குருக்கள், ஊழியர்கள், ஸ்தானீகர்கள் உள்ளிட்டோர் இணைந்து செய்திருந்தனர். 


காஞ்சி மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று கூறியதாவது: பஞ்சபூத ஸ்தலங்களில் முதன்மையான மண் ஸ்தலமான பிருத்வி ஷேத்ரமான சிவகாஞ்சி காமாட்சி அம்மன் சமேத ஏகாம்பரநாதர் கோவிலில் இன்றைய தினம் மிக விமரிசையாக சாஸ்திரியமான முறையில் ஜீர்னோதாரன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்த கும்பாபிஷேகத்தில் முக்கியமான நிகழ்வாக ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் விருப்பப்பட்ட தங்கரதம், ஏகாம்பரநாதருக்கு சமர்ப்பிக்கப் பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !