தருமபுரம் ஆதீனம் ஞானபீடம் அமர்ந்த நாள் விழா
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் 500 ஆண்டுகள் பழமையான தருமபுரம் ஆதீனம் அமைந்துள்ளது. இந்த ஆதீனத்தின் 27வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அருளாட்சி செய்து வருகிறார். இவர் ஞானபீடத்தில் அமர்ந்த நாளையொட்டி ஞானபுரீஸ்வரர் கோயிலில் சிறப்பு ஹோமம், ருத்ராபிஷேகம், 108 சங்காபிஷேகம் ஆகியவை நடந்தது. அதனையொட்டி நேற்று காலை சொக்கநாதருக்கு 108 சங்காபிஷேகம் செய்து குருமகா சந்நிதானம் சிறப்பு வழிபாடு மேற்கொண்டார். பின்னர் ஞானபுரீஸ்வரர் கோயிலில் நடந்த சிறப்பு ஹோமம் பூர்ணாஹுதியாகி ஞானபுரீஸ்வரர் சுவாமிக்கு ருத்ராபிஷேகம் நடந்தது. இதனை அடுத்து 27வது குருமகா சந்நிதானத்திற்கு ஞானாபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து 27வது குருமகா சந்நிதானம் ஞானபுரீஸ்வரர், தர்மபுரீஸ்வர், துர்க்கை அம்மன் சன்னதிகளில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டார். கோ பூஜை, கஜ பூஜை, அசுவ பூஜை ஆகியவை செய்து வழிபாடு மேற்கொண்டு மதியம் 27வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் ஞானகொலுக் காட்சியில் எழுந்தருள கட்டளை தம்பிரான் சுவாமிகள் சிறப்பு ஆரத்தி எடுத்து வழிபாடு செய்தனர்.
தொடர்ந்து குருமகா சந்நிதானம் வழுவூர் ராமலிங்க சிவாச்சாரியாருக்கு 10 ஆயிரம் பொற்கிழி வழங்கி அருளானி வழங்கினார். மதியம் மகேஸ்வர பூஜையும், தருமபுரம் குருஞானசம்பந்தர் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகளை குருமகா சந்நிதானம் வழங்கினார். இதில் திருஞானசம்பந்த தம்பிரான் சுவாமிகள், திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள், மாணிக்காவசக தம்பிரான் சுவாமிகள் மற்றும் ஆதீன பொதுமேலாளர் ரங்கராஜன் உட்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.