உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றத்தில் இருப்பது தீபத்துாண் தான்! ஆதாரங்களுடன் விளக்குகிறார் மதுரை வக்கீல்

திருப்பரங்குன்றத்தில் இருப்பது தீபத்துாண் தான்! ஆதாரங்களுடன் விளக்குகிறார் மதுரை வக்கீல்

மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான விவகாரத்தில், அது நில அளவைக்கல் என்று சிலர் ஆதாரமற்ற பொய்களை கூறிவரும் நிலையில், மதுரை வழக்கறிஞர் தங்கப்பாண்டியன், ‘ஆங்கிலேயர் காலத்து நில அளவைக்கல், தீபத்துாண் போல் இருக்காது’ என, ஆதாரங்களுடன் விளக்குகிறார்.


நம் நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டி: திருப்பரங்குன்றம் மலையில் வழக்கமாக ஏற்றும் உச்சி பிள்ளையார் கோவில் முன்பாக உள்ள துாணில் அல்லாமல், மலை உச்சியில் உள்ள பாரம்பரியமிக்க தீபத்துாணில் இந்தாண்டு தீபம் ஏற்ற உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ள நிலையிலும், நிறைவேற்ற அரசுத் தரப்பில் மறுக்கின்றனர். உயர் நீதிமன்ற உத்தரவை மாநில அரசே மதிக்காமல் இருப்பதை, தமிழகத்தில் தான் பார்க்க முடிகிறது. நீதிமன்றத்தின் மீதான சாமானியர்களின் நம்பிக்கை, எதிர்காலத்தில் எந்த அளவுக்கு கேள்விக்குறியாக வாய்ப்புள்ளது என்பதற்கு, இந்த விவகாரம் ஒரு முன்னுதாரணம்.


உயர் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற மறுப்பதற்கு கோவில் நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் தரப்பில் சொல்லப்படும் காரணங்களில் ஒன்று, ‘அது தீபத்துாண் இல்லை; நில அளவைக் கல் தான்’ என்பதாகும். நில அளவைக்கல் என்று பேசுவோர் சொல்லும் அந்த அளவையானது, மகா முக்கோணவியல் அளவீடு முறை ஆகும். ‘அந்த அளவீட்டில் பயன்படுத்தப்பட்ட அளவை கல்லின் எச்சம் தான் திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் உள்ள கல். அது தீபத்துாண் இல்லை’ என்பது கோவில் நிர்வாகத்தின் வாதம். எங்கோ, எவரோ, எழுதியதை, பேசியதை வைத்து, அது அளவைக்கல் தான் என்று பேசுவோ ர் எவருமே, ஜி.டி.எஸ்., அளவைக் கல்லின் எச்சமாக மிச்சமிருக்கும் கல்துாணை இதுவரை பார்த்திராதவர் என்றே அர்த்தம்.


முக்கோணவியல் அளவீட்டு முறையில், அளவீடு செய்யப்பட்ட அளவை கற்களின் எச்சம், தமிழகத்தில் சென்னையை தவிர வேறு எங்குமே இல்லை என்பது அளவியல் துறையினரின் தகவல். திருப்பரங்குன்றம் மலை, முக்கோணவியல் அறிவியலில் அளவீடு செய்யப்பட்ட ஒரு புள்ளி என்ற போதிலும், அந்த அளவீட்டில் பயன்படுத்தப்பட்ட அளவைக்கல் தான் மலை உச்சியில் இருக்கும் கல் என்பது திராவிடத்தனமான பேச்சு. திருப்பரங்குன்றம் மலை தீபத்துாண் போல, மதுரை கீழக்குயில்குடியில் உள்ள சமணர் மலை உச்சியிலும், இதே வடிவில் தீபத்துாண் உள்ளது. உண்மையில், சென்னையில் இருந்து தான் மேற்படி அளவீட்டு முறையில் இந்தியாவின் நிலப்பகுதி முழுதும் அளவீடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் பரங்கிமலையிலும், மங்களூரு பகுதியை சுற்றியுள்ள சில இடங்களிலும் மட்டுமே ஜி.டி.எஸ்., அளவையில் பயன்படுத்தப்பட்ட கற்களின் எச்சங்கள் உள்ளன. இந்த அளவை கல்லில் ஒரே மாதிரி எழுத்துகளுடன், ஜி.டி.எஸ்., என்ற குறியீடும், அந்த கல்லை பற்றிய விபர குறிப்பும் காணப்படுகிறது. ஆனால், திருப்பரங்குன்றம் தீபத்துாணில் அப்படி ஏதும் இல்லை. திருப்பரங்குன்றம் மலை, திருமங்கலம் வருவா ய் கோட்டாட்சியரின் எல்லைக்குள் வருகிறது. அவருடைய அலுவலகத்தில் உள்ள பதிவேடுகளை, நான் ஆய்வு செய்தபோது, நில அளவைக்கல் குறித்த எந்த விபரமும் அதில் இல்லை. அப்படி இருந்தால், தமிழக அரசு அதை உயர் நீதிமன்றத்தில் ஆதாரமாக காட்டியிருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !