காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் 48 நாள் மண்டலாபிஷேகம் துவக்கம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகத்தை தொடர்ந்து, இன்று முதல் மண்டலாஷேகம் துவங்கியது. இதில், காலை 11:00 மணிக்கும், மாலை 5:00 மணிக்கும் நவகலச பூஜை நடக்கிறது.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், 29 கோடி ரூபாய் செலவில், பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டு, 19 ஆண்டுகளுக்குப் பின் காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர், இளைய மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திரர் முன்னிலையில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது. நேற்று இரவு, திருக்கல்யாண உத்சவத்தை தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் வீதியுலாவும் நடந்தது. முன்னதாக திருக்கல்யாண உத்சவத்தையொட்டி, பெரிய காஞ்சிபுரம் வாணியர் தர்ம பரிபாலன சங்கம் சார்பில், ஏலவார்குழலி அம்பிகைக்கு மாங்கல்யம் வழங்கினர். கும்பாபிஷேகத்தை தொடர்ந்து, இன்று முதல் நாள் மண்டலாபிஷேகம் நடந்தது.
இதுகுறித்து ஏகாம்பரநாதர் கோவில் தலைமை அர்ச்சகர் சிவாச்சாரியார் காமேஸ்வர குருக்கள் கூறியதாவது: ஹிந்து சமய அறநிலையத் துறை சார்பில் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டு நேற்று காலை கும்பாபிஷேகமும், இரவு திருக்ககல்யாண உத்சவமும், பஞ்ச மூர்த்திகள் புறப்பாடும் விமரிசையாக நடந்தது. மண்டலாபிஷேகம் இன்று துவங்கியது. இதில் காலை 11:00 மணிக்கும், மாலை 5:00 மணிக்கும் நவகலச பூஜை நடக்கிறது. இன்று துவங்கிய மண்டலாபிஷேகம், 48 நாட்களுக்கு நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார். மண்டலாபிஷேகத்திற்கான ஏற்பாட்டை ஹிந்து சமய செயல் அலுவலர் முத்துலட்சுமி, அறங்காவலர் குழு தலைவர் வேல்மோகன், அறங்காவலர்கள் ஜெகன்நாதன், வசந்தி சுகுமாரன், வரதன், விஜயகுமார், கோவில் சர்வ சாதகம் ஸ்தலம் பாலசுப்ரமணிய குருக்கள், ஸ்தானீகம் சங்கர் நாயஹர், ஸ்தலத்தார், ஸ்தானீகர்கள், உள்ளிட்டோர் இணைந்து செய்து வருகின்றனர்.