உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பக்தர்களுக்கு இடையூறு ஏற்படும் கடை: கண்டுகொள்ளாத அறநிலையத்துறை

பக்தர்களுக்கு இடையூறு ஏற்படும் கடை: கண்டுகொள்ளாத அறநிலையத்துறை

அவிநாசி; அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்தில் பலகார கடை.கண்டுகொள்ளாத அறநிலையத்துறை.


கொங்கேழு சிவாலயங்களில் முதன்மையானதாகவும்,காசிக்கு நிகராக போற்றப்படும் ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி  ரிசனத்திற்காக வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் வெளிப்பிரகாரத்தில் உள்ள ஆஞ்சநேயர் சன்னதியில் சாமி தரிசனம் செய்துவிட்டு சுற்றி வந்து சற்று நேரம்,அமர்ந்து விட்டு செல்வது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறநிலையத்துறை மூலம் கோவில் வளாகத்தை ஒட்டியே பலகார கடை ஏலம் விடப்பட்டது. ஏலம் எடுத்த நபர் ஏலத்தில் குறிப்பிட்ட அளவையும் மீறி பக்தர்கள் ஆஞ்சநேயர் சன்னதியை சுற்றி வரும் பகுதியை அடைத்து பக்தர்கள் இளைப்பாறவும், தியானம் செய்யவும் அமரும் இடம் வரை பலகாரக் கடையை டேபிள் போட்டு ஆக்கிரமித்து வைத்துள்ளார். இதுகுறித்து பக்தர்கள் கூறும்போது, அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்த பிறகு ஏராளமான பக்தர்கள் நாள்தோறும் வந்து செல்கின்றனர். கோவில் வெளி வளாகத்தில் வடக்கு பகுதியில் தேங்காய் பழக்கடை,பொருட்கள் பாதுகாப்பு அறை, காலணிகள் பாதுகாப்பு அறை என கடைகள் கட்டப்பட்டுள்ளது. 


அதில் தேங்காய் பழக்கடை மட்டும் ஏலம் நடைபெற்று செயல்பாட்டில் உள்ளது. மீதி உள்ள இரண்டு கடைகளும் அறநிலையத்துறை வசம் உள்ளது. தற்போது பிரகாரத்தில் உள்ள பலகார கடையை அகற்றி,காலியாக உள்ள ஏதாவது ஒரு கடையில் பலகார கடை வைப்பதற்கு அனுமதி அளித்து கடையை நடத்தினால்,பக்தர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு வந்து அமர்வதற்கு போதிய இட வசதி ஏற்படும். மேலும் பலகார கடையில் சர்க்கரை மற்றும் வெண்பொங்கல்,இனிப்பு பதார்த்தங்கள் மற்றும் உணவுகளை வாங்கி சாப்பிடும் பக்தர்கள் ஆங்காங்கே தொன்னைகளை போட்டு விட்டு, சாப்பிடும் போது கீழே விழும் பருக்கைகளையும் சுத்தம் செய்யாமல் செல்வதால் பிரகாரத்தில் அசுத்தம் ஏற்படுவதுடன் ஈக்கள் அதிகளவில் மொய்ப்பதாக கூறுகின்றனர். உடனடியாக பிரகாரத்தில் உள்ள பலகார கடையை அகற்றி பக்தர்கள் அமர்வதற்கும்,பிரகாரங்களை சுத்தமாக வைப்பதற்கும் அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !