மயிலாப்பூர் பகுதியில் பழமையான சிற்பங்கள் கண்டெடுப்பு
சென்னை: மயிலாப்பூர் பகுதியில், தொல்லியல் ஆய்வாளர் சங்கத்தினர் ஆய்வுகள் நடத்தினர். அதில், கபாலீஸ்வரர் கோவில் அருகில் உள்ள தர்மராஜா கோவிலில், 500 ஆண்டுகள் பழமையான மூன்று பலகைக்கல் சிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
இது குறித்து, அச்சங்கத்தின் தலைவர் மணியன் கலியமூர்த்தி கூறியதாவது: தர்மராஜா கோவிலில், 15ம் நுாற்றாண்டைச் சேர்ந்த மூன்று பலகைக்கல் சிற்பங்களைக் கண்டறிந்தோம். அவற்றில் ஒன்று 2 அடி உயரம், ஒன்றரை அடி அகலத்தில், ஒரு ஆணும் பெண்ணும் கம்பீரமாக நிற்கின்றனர். இவர்களின் ஆடை, ஆபரணங்கள் செழுமையின் அடையாளமாக உள்ளன. இதன் மேல் பகுதியில், சூரியன், சந்திரன் மற்றும் ‘திரு காபாலி’ என எழுதப்பட்டுள்ளது. இதிலிருந்து, ஒரு தம்பதி, கபாலீஸ்வரரின் பெயரால், ஏதோ ஒரு தியாகம் செய்துள்ளனர். அதனால், அவர்களின் புகழ் சூரியன், சந்திரன் உள்ளவரை நிலைத்திருக்கும் என்பதற்கு அடையாளமாக உள்ளது. இரண்டாவதாக, ஒரு பலகைக்கல்லில், கணவன் கைகூப்பி வணங்கிய நிலையிலும், மனைவி வலக்கரத்தில் பூச்செண்டு ஏந்தியவாறும் உள்ளனர். இது, கணவன் இறப்புக்குப்பின், உடன்கட்டை ஏறிய மனைவி அல்லது ஊருக்காக உயிர்த்தியாகம் செய்தவருடன் உடன்கட்டை ஏறிய மனைவியின் தியாகத்தைக் குறிக்கும் சிற்பமாக இருக்கலாம். இது, ‘மாசதிக்கல் , சதிக்கல் அல்லது தீப்பாய்ந்தாள் கல்’ என்ற வகையைச் சேர்ந்தது. அடுத்த சிற்பம், விரிசடை கோலத்தில் தன் வலது கையில் வெட்டப்பட்ட தலையை ஏந்திய வீரனின் உருவம் உள்ளது. அவன் இடையில் கூர்வாள் உள்ளது. இது, போரில் வெற்றி பெறவோ, வெற்றி பெற்றதற்காகவோ அல்லது தன் சவாலை நிறைவேற்றியதற்காகவோ, தலையை அரிந்து காணிக்கை செலுத்தும் வகையைச் சேர்ந்தது. இந்த சிற்பங்கள், நாயக்கர் காலத்தில், மயிலாப்பூர் பகுதியில் வாழ்ந்தோரின் வாழ்வியல் முறையை விளக்குபவையாக உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.