பாலக்காடு பகவதி அம்மன் கோவில் ஆறாட்டு மகோத்சவம் கோலாகலம்
பாலக்காடு; பாலக்காடு, கண்ணுகோட்டு பகவதி அம்மன் கோவில் ஆறாட்டு மகோத்சவம் வெகு விமர்சியாக நடைபெற்றது.
கேரள மாநிலம், பாலக்காடு, பிராயிரி கண்ணுகோட்டு பகவதி அம்மன் கோவிலில், ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் ஆறாட்டு மகோத்சவம் நடப்பது வழக்கம். நடப்பாண்டு ஆறாட்டு மகோத்சவத்திற்க்கு டிச., 3ம் தேதி தந்திரி பிரஹ்மஸ்ரீ அணிமங்கலம் வாசுதேவன் நம்பூதிரியின் தலைமையில், கொடியேற்றம் நடந்தது. உற்சவ நாளான, இன்று காலை 4:30 மணிக்கு மகா கணபதி ஹோமம், 5:00 மணி முதல் அபிஷேகம், உஷ பூஜை, கலச பூஜை ஆகியவை நடந்தது. 6:00 மணிக்கு அஷ்டபதி, 8:00 மணிக்கு கோவில் குளத்தில் அம்மனுக்கு நடந்த மஞ்சள் நீராடடில் (ஆறாட்டு) ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 9:30 மணிக்கு பிரஹ்மகலசாபிஷேகம், 10:15க்கு உச்ச பூஜை ஆகியவை நடைபெற்றது. 10:30 மணிக்கு பிரபல வாத்திய கலைஞர் கோங்காடு மதுவின் தலைமையிலான 50க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொண்ட பஞ்சவாத்தியம் முழங்க பாம்பாடி ராஜன் என்ற யானை அம்மனின் உருவச் சிலை ஏந்த ஆடை ஆபரணங்கள் அணிந்து முத்து மணி குடைகள் சூடிய ஐந்து யானைகளின் அணிவகுப்புடன் காழ்ச்ச சீவேலி நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.