பஞ்சவடியில் டிச.19ல் அனுமன் ஜெயந்தி; 2,000 லிட்டர் பாலபிஷேகம்
சென்னை: விழுப்புரம் மாவட்டம், புதுச்சேரி – திண்டிவனம் நெடுங்சாலையில், பஞ்சவடி திருத்தலம் அமைந்துள்ளது. இங்கு, வலம்புரி மஹா கணபதி, பட்டாபிஷேக ராமச்சந்திர மூர்த்தி, ஸ்ரீவாரி வேங்கடாஜலபதி மற்றும் 36 அடி உயர பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில்கள் அமைந்துள்ளன. இந்நிலையில், பஞ்சவடி பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில், டிச.,19ம் தேதி, அனுமன் ஜெயந்தி விழா விமரிசையாக நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கின்றன. முதலாவதாக, பகவத் பிரார்த்தனை, அனுக்ஞை, மஹா சங்கல்பம், அங்குரார்ப்பணம் மற்றும் வாஸ்து சாந்தி என பூஜைகள் நேற்று மாலை துவங்கின. இன்று முதல், டிச.,18ம் தேதி வரை, ஆறாம் காலம் முடிய, ஒவ்வொரு காலத்திலும், புண்யாஹவாசனம், பஞ்சஸுக்த ஹோமம், மூலமந்த்ர ஹோமம், பூர்ணாஹூதி, சாற்றுமுறை, லட்சார்ச்சனை நடக்க உள்ளன. ஏழாம் கால பூஜை, வரும் 19ம் தேதி காலை முடிவடையும். அனுமன் ஜெயந்தி விழாவை ஒட்டி, டிச., 19ம் தேதி அதிகாலை 4:00 மணிக்கு, விஸ்வரூப தரிசனம், கோ பூஜை, தனுர் மாத பூஜைகள் நடக்கும். காலை 6:00 மணிக்கு மேல் யாக சாலையில் ஏழாம் கால பூஜை நடக்கும். காலை 8:30 மணிக்கு, 36 அடி உயர ஆஞ்சநேயர் சிலைக்கு, 2,000 லிட்டர் பாலபிஷேகம் நடக்கும். அலங்காரத்துக்கு பின், ஆஞ்சநேயருக்கு 130 கிலோ எடை கொண்ட ஏலக்காய் மாலை சாற்றப்படுகிறது. அதன்பின், தாமல் ராமகிருஷ்ணனின் ஆன்மிக சொற்பொழி நடக்கிறது. காலை 10:00 மணி முதல் தெய்வீக இசை கச்சேரி நடக்கிறது. பின், மதியம் 12:00 மணிக்கு, ஆஞ்சநேயருக்கு திருவாராதனம் நடைபெறும். ஜெயந்தி விழாவுக்கு வரும் பக்தர்களுக்கு, ஜெயமாருதி சேவா ஏற்பாட்டின்படி, சிறப்பு அன்னதானம் அளிக்கப்படுகிறது; சிறப்பு பிரசாதமும் வழங்கப்படும். மாலை 4:00 மணிக்கு மேல், பாலமுருகன், குமரன் குழுவினரின் மங்கள இசையுடன், ராமர் – சீதா கல்யாணம் நடக்கிறது. இத்தகவல்களை, பஞ்சமுக ஸ்ரீஜெயமாருதி சேவா டிரஸ்டின் நிர்வாக அறங்காவலர் கோதண்டராமன், உப தலைவர் யுவராஜன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.