காஞ்சி ஏகாம்பரர் கோவிலில் ஆயிரங்கால் மண்டபம்; பக்தர்கள் பார்வையிட திறப்பு
காஞ்சிபுரம்: நம் நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் பூட்டப்பட்டிருந்த ஆயிரங்கால் மண்டபத்தை, பக்தர்கள் பார்வையிடுவதற்காக நேற்று திறக்கப்பட்டது.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், கடந்த 8ம் தேதி கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது. விடுமுறை நாளான நேற்று முன்தினம் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. சுவாமி தரிசனம் செய்த பின் பிற சன்னிதிகளை தரிசனம் செய்த பக்தர்கள், புதுப்பிக்கப்பட்ட ஆயிரங்கால் மண்டபத்தை காண்பதற்காக பல்லவ கோபுரம் நுழைவாயிலுக்கு ஆவலுடன் சென்றனர். ஆனால், அங்கு ஆயிரங்கால் மண்டபத்தின் நுழைவாயில் உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததை பக்தர்கள் கண்டனர். இதையடுத்து, ஆத்திரமடைந்த பக்தர்கள், அங்கு பணியில் இருந்த ஊழியரிடம், வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் உத்தரவுப்படி ஆயிரங்கால் மண்டபத்தை பூட்டி உள்ளேன் என்று பதில் அளித்தபடி, பணியில் இருந்த ஊழியர் அங்கிருந்து சென்றார். இதனால், ஆயிரங்கால் மண்டபத்தை காண்பதற்காக பல்லவர் கோபுரம் நுழைவாயிலில் காத்திருந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். இதுகுறித்து, நம் நாளிதழில் நேற்று படத்துடன் செய்தி வெளியானது. இதை தொடர்ந்து, பூட்டப்பட்டிருந்த ஆயிரங்கால் மண்டபத்தை கோவில் நிர்வாகம் நேற்று காலை திறந்து, பக்தர்கள் பார்வையிட அனுமதித்தது.