செரப்பனஞ்சேரி வீமீஸ்வரர் கோவிலில் பாலாலயம்
ஸ்ரீபெரும்புதுார்: படப்பை அடுத்த, செரப்பனஞ்சேரியில் உள்ள வீமீஸ்வரர் கோவிலில், 2.96 கோடி ரூபாய் மதிப்பில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ள நிலையில், நேற்று பாலாலயம் நடந்தது.
குன்றத்துார் ஒன்றியம், படப்பை அடுத்த, செரப்பனஞ்சேரியில், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் சொர்ணாம்பிகை சமேத வீமீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் 2,000 ஆண்டுக்கு முன், குலோத்துங்க மன்னரால் கட்டப்பட்டது. 27 நட்சத்திரங்களுக்கு, வின்மீன்களுக்கும் அதிபதியானதால் வீமீஸ்வரர் என்று இத்தலம் அழைக்கப்படுகிறது. இந்த கோவில், பல ஆண்டுகளுக்கு மேலாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவில்லை. இதனால், கோவில் கோபுரம் மற்றும் சுவர் உள்ளிட்டவை முற்றிலும் சேதமடைந்துள்ளது. மேலும், பக்தர்கள் பங்களிப்புடன் பிரதோஷம், சிவராத்திரி விழா உள்ளிட்டவை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், 2,000 ஆண்டு பழமையான இக்கோவிலை புனரமைக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதை சுட்டிக்காட்டி, இரண்டு ஆண்டுகளுக்கு முன், நம்நாளிதழில் செய்தி வெளியானதை அடுத்து, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேரில் பார்வையிட்டு, கோவில் விரைவில் புனரமைக்கப்படும் என உறுதி அளித்தார்.
இதையடுத்து, இக்கோவிலை பழமை மாறாமல் புனரமைத்து, விநாயகர் சன்னிதி, முருகன் சன்னிதி, அம்பாள் சன்னிதி, சண்டிகேஸ்வரர் சன்னிதி, சூரியன் சன்னிதி, சந்திரன் சன்னிதி ஆகியவை கட்ட, ஹிந்து சமய அறநிலையத்துறை ஆணையர் நிதியின் கீழ், 2.96 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. அதை தொடர்ந்து, கடந்த நவ., 27ம் தேதி, தமிழக முதல்வர் ஸ்டாலின், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக புனரமைப்பு பணிகளை துவக்கி வைத்தார். இதையடுத்து, நேற்று பாலாலயம் நடந்தது. அதை தொடர்ந்து, கும்பத்தில் ஆவாகனம் செய்யப்பட்டிருந்த மூலவர் வீமீஸ்வரர், சொர்ணாம்பிகை, சூரியன், விநாயகர், நந்தி ஆகிய மூர்த்திகளை அத்தி பலகையில் ஆவாகனம் செய்யும் பூஜை நடந்தது.
பின்னர், மூல மூர்த்திகள் ஆவாகனம் செய்யப்பட்ட அத்தி பலகைகளுக்கு பாலாலய கும்பாபிஷேகம் நடைபெற்றது. நிகழ்ச்சியில், அறநிலையத்துறை உதவி ஆணையர் கார்த்திகேயன், கோவில் செயல் அலுவலர் செந்தில்குமார், ஆய்வாளர் பிரித்திகா, செரப்பனஞ்சேரி ஊராட்சி தலைவர் ஏழுமலை மற்றும் பலர் பங்கேற்றனர்.