சிறுபாலை கிருஷ்ணர் கோயில் கல்வெட்டு, கொடிமரம் அகற்றம்
இளையான்குடி: இளையான்குடி அருகே சிறுபாலையில் கிருஷ்ணர் கோயில் பட்டா இடத்தில் இருந்த கொடிமரம், கல்வெட்டை அரசு அதிகாரிகள் அகற்றினர். இதற்கு பா.ஜ., நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுப்படி பொது இடங்களில் அரசியல் கட்சியினர் மற்றும் சமுதாய அமைப்புகளை சேர்ந்தவர்கள் சார்பில் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் போர்டுகள், வளைவு, பீடங்கள் ஆகியவற்றை இரண்டு நாட்களாக வருவாய் துறையினர் அகற்றி வருகின்றனர். நேற்று இளையான்குடி அருகே சிறுபாலை கிராமத்தில் உள்ள கிருஷ்ணர் கோயிலுக்கு சொந்தமான பட்டா இடத்தில் இருந்த கோயில் கொடிமரம் மற்றும் கல்வெட்டு ஆகியவற்றையும் வருவாய்த்துறை அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றினர். இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பா.ஜ., மாவட்ட செயலாளர் ராஜ பிரதீப்,ஒன்றிய தலைவர் செல்லக்குட்டி பாலமுருகன் கூறியதாவது: அரசியல் கட்சியினர் மற்றும் சமுதாய அமைப்புகளை சேர்ந்தவர்களால் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ், அலங்கார வளைவு, பீடங்களை அகற்றுவதை வரவேற்கிறோம். ஆனால் கிருஷ்ணர் கோயிலுக்கு சொந்தமான பட்டா இடத்தில் இருந்த கொடிமரம் மற்றும் கல்வெட்டுக்களை அகற்றியதை வன்மையாக கண்டிக்கிறோம் என்றனர்.