ஆதிதிருவரங்கம் ரங்கநாதர் கோவிலில் தரமற்ற முறையில் திருப்பணிகள் கிராம மக்கள் கலெக்டரிடம் புகார் மனு
கள்ளக்குறிச்சி: ஆதிதிருவரங்கம் ரங்கநாதர் பெருமாள் கோவில் திருப்பணிகள் தரமற்ற முறையில் நடப்பதாக கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
கிராம மக்கள் அளித்த மனுவில்; ஆதிதிருவரங்கத்தில் பழமை வாய்ந்த ரங்கநாதர் பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகத்திற்காக திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே திருப்பணிகளை முடித்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்பதால் பணிகள் அவசர கதியில் தரமற்ற முறையில் நடந்து வருகிறது. மேலும், கோவில் பிரகாரத்திற்குள் புதிய கட்டுமான பணிகள் செய்யக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதையும் மீறி உட்பிரகாரத்திற்குள் மிகப்பெரிய அளவில் அன்னதான கூடம் கட்டப்பட்டுள்ளது. இதனால், பக்தர்கள் கோவிலுக்குள் நிற்பதற்கும், பிரகாரத்தை சுற்றி வருவதற்கும் இடமில்லாத நிலை உள்ளது. கருவறையின் மேல் கலசத்தில் இருந்து பிரபஞ்ச சக்தி மூலவர் மேல் விழுந்து, பக்தர்களுக்கு பிரதிபலிக்கும் என்பதும் ஆகம விதியாகும். அதை தடுக்கும் வகையில் கருவறையின் மேல் மரப்பலகை அமைத்து மூடப்பட்டுள்ளது. எனவே கோவிலில் நேரடி ஆய்வு மேற்கொண்டு ஆகம விதிகள் மீறாமலும், கோவிலின் பழமை மாறாமலும் திருப்பணிகள் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.