உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாலக்காடு ஐயப்பன் கோவிலில் விளக்கு மகோற்சவம்

பாலக்காடு ஐயப்பன் கோவிலில் விளக்கு மகோற்சவம்

பாலக்காடு; பாலக்காடு மேற்கு யாக்கரை ஐயப்பன் கோவிலில் விளக்கு மகோற்சவம் கோலாகலமாக நடந்தது.


கேரள மாநிலம், பாலக்காடு மேற்கு யாக்கரை மகாவிஷ்ணு கோவில் அருகே ஐயப்பன் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டு தோறும் விளக்கு மகோற்சவம் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டு விளக்கு மகோற்சவம், நேற்று காலை, 5:30 மணிக்கு மகா கணபதி ஹோமத்துடன் துவங்கியது. காலை, 7:30 மணிக்கு நிறமாலை, உஷ பூஜை நடந்தது. இதையடுத்து, பல்லாவூர் ஸ்ரீதரன் மாரார் தலைமையிலான, 50க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்ற பஞ்சாரி மேளம் என்ற செண்டை மேளம் வாசிக்கப்பட்டது. தொடர்ந்து மூலவருக்கு அபிஷேக தீர்த்தம் கொண்டு வருதல், காலை, 11:00 மணிக்கு சிறப்பு பூஜை, பஞ்சகவ்யம், உச்ச பூஜை நடந்தது. மதியம், 12:00 மணிக்கு அணிவகுப்பில் கலந்து கொள்ளும் யானைகளுக்கு உணவளிக்கப்பட்டது. மாலை, 5:00 மணிக்கு பஞ்சாரி மேளம் மற்றும் மேல தாளங்கள் முழங்க மூன்று யானைகள் அணிவகுப்பில், உற்சவர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மாலை, 6:00 மணிக்கு சுற்று விளக்கு ஏற்றி பக்தர்கள் வழிபாடு செய்தனர். இதையடுத்து, மூலவருக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. இரவு 9:00 மணிக்கு மண்டல பூஜை, சாஸ்தாம் பாட்டு ஆகியவை நடந்தன. இன்று நடக்கும் சிறப்பு பூஜைகளுடன் உற்சவம் நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !