உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மயிலாப்பூரில் மார்கழி இசை; ரசிகர்களின் உள்ளத்தில் பக்தி பரவசம்

மயிலாப்பூரில் மார்கழி இசை; ரசிகர்களின் உள்ளத்தில் பக்தி பரவசம்

மயிலாப்பூர் பாரதிய வித்யாபவனில், வளரும் குரலிசை கலைஞரான அனுக்ரஹ் லட்சுமணனின் கச்சேரி நடந்தது. இவர், பிரபல கலைஞர் ஜெயஸ்ரீ அரவிந்த் என்பவரின் மாணவர். தன் திறமைக்கு சான்றாக, திருவொற்றியூர் தியாகய்யரின் கேதாரகவுளை வர்ணத்தை, ஆதி தாளத்தில் பாடி, ரசிகர்களை மயக்கம் கொள்ள வைத்தார். முத்துசுவாமி தீட்சிதர் இயற்றிய, ‘சூர்யமூர்த்தே’ என்ற கிருதியை, சவுராஷ்டிர ராகத்தில், பக்தியும், வீரமும் கமழும் வகையில், மார்கழியில் எழும் சூரியனை வரவேற்று பாடினார். தொடர்ந்து, பட்ணம் சுப்பிரமணிய அய்யர் இயற்றிய, ‘அபரதாமுலன்னியு’ கிருதியை மனம் உருக பாடி, ரசிகர்களின் உள்ளத்தில் பக்தி ரசத்தை கூட்டினார்.


அடுத்து, முகாரியை தேர்ந்தெடுத்து, தனக்கு உண்டான ரசிகர்களை லாவகமாக கையாண்ட விதம் அருமை. அதை சமன் செய்யும் விதமாக, ‘கொலுவையுன்னாதே’ எனும், தியாகராஜரின் கிருதியை, தேவகாந்தாரி ராகத்தில் பாடி, சில்லென்ற இதத்தை, அரங்கினுள் ஏற்படுத்தினார். தொடர்ந்து, நாட்டைக்குறிஞ்சியில் ஸ்வரமெடுத்து, ‘வழி மறைத்திருக்குதே’ கிருதியை எட்டிப்பிடித்தார். அடுத்து, ‘செலி நேநெட்லு’ கிருதியை ஜாவளியில் பாடி, காதலின் தாக்கத்தை ஏற்படுத்தினார். அதில் உணர்ச்சியூட்டும் வகையில், ‘அவனிதனிலே’ எனும் திருப்புகழை, தேஷ் ராகத்தில் பாடினார். இந்த கச்சேரிக்கு மேலும் இதம் சேர்த்தது, வயலின் கலைஞர் ஸ்ரீகாந்த் மற்றும் மிருதங்க கலைஞர் கவிசெல்வன் ஆகியோரின் இசை. இந்த கூட்டணி, கச்சேரியில் தனி இடத்தை பிடித்துவிட்டது. – நமது நிருபர் –: 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !