பக்தர்களுக்கு வழங்கப்படும் உணவு திருநள்ளாறு கோவிலில் கலெக்டர் ஆய்வு
காரைக்கால்: திருநள்ளாறு சனி பகவான் கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் உணவு தரமாக உள்ளதா என, கலெக்டர் ரவிபிரகாஷ் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.
காரைக்கால் திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் அனுக்கிரகமூர்த்தியாக சனி பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். இங்கு பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதி, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் ரவி பிரகாஷ் தலைமையிலான அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்து கோவில் நிர்வாக அதிகாரி சுப்ரமணியன் விளக்கினார். பின்னர், நடந்த கூட்டத்தில் பேசிய கலெக்டர் ரவி பிரகாஷ், ‘கோவிலில் பக்தர்கள் கூட்டம் வந்தால் காவல்துறை மூலம் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். கோவிலில் பாதுகாப்பு மற்றும் இதர ஏற்பாடுகள் குறித்து விரிவான திட்ட குழு அமைக்க வேண்டும். கோவில் முழுதும் ஒரு கிலோமீட்டர் துாரத்திற்கு பிளாஸ்டிக் பொருட்கள் இல்லாமல் துாய்மையாக வைத்திருக்க வேண்டும்.
பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த கோவில் நிர்வாகமும், காவல் துறையும் இணைந்து செயல் பட வேண்டும் என, அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். பின், சனி பகவானை தரிசனம் செய்த கலெக்டர், கோவில் நிர்வாகம் சார்பில், செயல்படுத்தப்படும் அன்னதான திட்டத்தில் பக்தர்களுடன் இணைந்து மதிய உணவை சாப்பிட்டு, தரம் குறித்து ஆய்வு செய்தார். சீனியர் எஸ்.பி., லட்சுமி சவுஜன்யா, துணை கலெக்டர்கள் பூஜா, பக்கிரிசாமி, எஸ்.பி., முருகையன் ஆகியோரும் உணவு சாப்பிட்டனர். ‘கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் மேம்படுத்தப்பட்டு புரூட் சாலட் மற்றும் வாழைப்பழம் அடங்கிய உணவுகள் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. அன்னதான திட்டத்திற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது என, கலெக்டர் தெரிவித்தார்.