கடலுாரில் ஆங்கில புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு
கடலுார்: கடலுாரில் ஆங்கில புத்தாண்டையொட்டி கோவில்கள் நடந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
ஆங்கில புத்தாண்டையொட்டி கடலுாரில் நேற்று இரவு முதல் பொதுமக்கள் கேக் வெட்டியும், வண்ண மயமான வான வேடிக்கைகள் மூலமும் புத்தாண்டை கொண்டாடினர். இன்று காலை திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில், ஆங்கில புத்தாண்டையொட்டி அதிகாலை 5 மணி முதல் பொதுமக்கள் பெருமாளை தரிசனம் செய்தனர். கடலுார் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில், நேற்று காலை பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் விநாயகர், சுப்ரமணியர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. பொதுமக்கள் தீபம் ஏற்றி வழிபட்டனர்.
திருப்பாதிரிப்புலியூர் வரதராஜபெருமாள் கோவிலில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜபெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருப்பாதிரிப்புலியூர் வீரஆஞ்சநேயர் கோவில்களில் அதிகாலை 4 மணி முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். செம்மண்டலம் சாந்த ஆஞ்சநேயர் கோவிலில் 26அடி உயர சாந்த ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல் மஞ்சக்குப்பம் செல்வ விநாயகர் கோவில், புதுப்பாளையம் தரைகாத்த காளியம்மன் கோவில், இரட்டைப்பிள்ளையார் கோவில், சுப்பிரமணியசுவாமி கோவில், வண்டிப்பாளையம் சிவசுப்பிரமணியசுவாமி கோவில், முதுநகர் ஐந்துகிணற்று மாரியம்மன் கோவில் உட்பட கடலுாரில் உள்ள கோவில்களில் ஆங்கில புத்தாண்டையொட்டி நடந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.