நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 3 டன் மலர்களால் அபிஷேகம்: தங்கக்கவசத்தில் அருள்பாலிப்பு
நாமக்கல்; ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயருக்கு, 3 டன் எடையுள்ள பல்வேறு மலர்களால், புஷ்பாபிஷேகம் செய்யப்பட்டது.
நாமக்கல் நகரின் மையமான, மலைக்கோட்டை பகுதியில் நரசிம்ம சுவாமி மற்றும் நாமகிரி தாயார் கோவில் எதிரில், ஒரே கல்லால், 18 அடி உயரத்தில் ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. அங்கு வணங்கிய நிலையில், சாந்த சொரூபியாக ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இன்று ஆங்கில புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு அதிகாலை, 4:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்துப்படி செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் நல்லெண்ணெய், சீயக்காய், திருமஞ்சள், பால், தயிர், பஞ்சாமிர்தம், மஞ்சள், சந்தனம், உள்ளிட்ட நறுமண பொருட்களால் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து நாமக்கல் ஆஞ்சநேயர் அபிஷேக குழு சார்பில், ஆஞ்சநேயருக்கு, 3 டன் எடையுள்ள துளசி, முல்லை, மல்லிகை, சம்மங்கி, சாமந்தி, அரளி, அல்லி, ரோஜா உள்ளிட்ட பல்வேறு வகையான மலர்கள், சுவாமி மீது கூடை கூடையாக கொட்டப்பட்டு சிறப்பு புஷ்பாபிஷேகம் நடந்தது. பின்னர், தங்கக்கவசம் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு ஆஞ்சநேயர் அருள்பாலித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.